ADDED : பிப் 18, 2024 01:24 AM

மும்பை, வரும் லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவுக்கு எதிராக, தன் மனைவி சுனேத்ராவை நிறுத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டன.
தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த சரத் பவார், தன் மகளும், எம்.பி.,யுமான சுப்ரியா சுலே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரை கட்சியின் செயல் தலைவர்களாக நியமித்தார்.
அமைச்சர் பதவி
இதனால், அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த தலைவரும், சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் கட்சியில் இருந்து வெளியேறி, ஆளும் பா.ஜ., - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்.
அவருக்கு துணை முதல்வர் பதவியும், ஆதரவு எம்.எல்.ஏ.,க்களில் சிலருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அதன் சின்னமும் தனக்கே சொந்தம் என அறிவிக்கக் கோரி தலைமை தேர்தல் கமிஷனில் அஜித் பவார் மனு அளித்தார்.
சரத் பவார் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பெரும்பாலான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவார் பக்கம் இருப்பதால், கட்சி அவருக்கே சொந்தம் என அறிவித்தது.
சரத் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் - சரத் சந்திர பவார் என்ற பெயரையும் பரிந்துரைத்தது.
இந்நிலையில், சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலேவின் கோட்டையாக விளங்கும் மஹாராஷ்டிராவின் பாராமதி ேலாக்சபா தொகுதியில், புதிய வேட்பாளரை களமிறக்க அஜித் பவார் திட்டமிட்டுஉள்ளது தெரியவந்துள்ளது.
அங்கு கட்சித் தொண்டர்களிடம் பேசிய அஜித் பவார், ''இதுவரை தேர்தலில் போட்டியிடாத ஒருவரை பாராமதி தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவேன். அந்த வேட்பாளருக்கு அனுபவம் மிக்கவர்களின் ஆதரவு உண்டு. புதியவரான அந்த வேட்பாளருக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்,'' என்றார்.
இதன் வாயிலாக, பாராமதி தற்போதைய வேட்பாளராக உள்ள சுப்ரியாவுக்கு எதிராக, தன் மனைவி சுனேத்ராவை அஜித் பவார் நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பார்ப்பு
அங்கு, பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் சுனேத்ரா, அந்த தொகுதி மக்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால், லோக்சபா தேர்தலில் அங்கு கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவரது பணிகளுக்கு அஜித் பவார் ஆதரவளித்து வருவதாக கூறப்படும் நிலையில், சுனேத்ராவின் புகைப்படம் தாங்கிய விளம்பர வாகனம் ஒன்று, அந்த தொகுதியில் வலம் வருகிறது.
சரத் பவாருக்கு அடுத்தபடியாக கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக சுப்ரியா சுலே உருவெடுப்பதை தடுக்கும் வகையில், இந்த திட்டத்தை அஜித் பவார் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேதி, வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் முன்பே, பாராமதி தொகுதிக்கு அஜித் பவார் சூசகமாக தன் வேட்பாளரை அறிவித்துள்ளது மஹாராஷ்டிரா அரசியலில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.