மாமனார் வீட்டுக்கு செல்ல போலீஸ் ஜீப்பை அழைத்த நபர்
மாமனார் வீட்டுக்கு செல்ல போலீஸ் ஜீப்பை அழைத்த நபர்
ADDED : செப் 29, 2024 05:49 AM

சிக்கமகளூரு: கர்நாடகாவில், சிறப்பு பூஜையில் பங்கேற்க, மாமனார் வீட்டுக்கு செல்ல இரவு நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததால், அவசர போலீஸ் 112க்கு தொடர்பு கொண்டு, தன்னை மாமனார் வீட்டில் விடும்படி கேட்டவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர்.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், முடிகெரேயின் தருவே கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்.
சமீபத்தில், அவசர போலீஸ் 112க்கு தொடர்பு கொண்டு, 'எங்கள் கிராமத்தில் கடுமையான சண்டை நடக்கிறது' என தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த போலீசார், 'எங்கு, என்ன பிரச்னை' என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அசோக், 'மன்னிக்கவும் சார், பால்குனி கிராமத்தில் உள்ள என் மாமனார் வீட்டில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் பங்கேற்க, என் குடும்பத்தினர் காலையே சென்றுவிட்டனர்.
'பணி முடிந்து நான் செல்ல நினைத்தபோது, நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ் வரவில்லை; மழையும் பெய்ய துவங்கி விட்டது. எனக்கு வேறு வழி தெரியாததால், உங்களுக்கு போன் செய்தேன்.
'தயவு செய்து, என்னை பால்குனி கிராமத்தில் விட்டு விடுகிறீர்களா' என அப்பாவியாக கேட்டார்.
இதை கேட்ட போலீசாருக்கு, சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. 'போலீஸ் வாகனம் சமூக சேவை, அரசு பணி செய்வதற்காக தான்.
'உன்னை ஜீப்பில் அழைத்துச் செல்ல முடியாது' என்று கூறி, அவ்வழியாக வந்த லாரியில் ஏற்றி, பால்குனி கிராமத்தில் விட்டு விடும்படி அனுப்பி வைத்தனர்.