ஓடும் பஸ்சில் எச்சில் துப்ப கதவை திறந்தவர் உயிரிழப்பு
ஓடும் பஸ்சில் எச்சில் துப்ப கதவை திறந்தவர் உயிரிழப்பு
ADDED : நவ 30, 2024 08:39 PM
சுல்தான்பூர்:ஓடும் பஸ்சில் எச்சில் துப்புவதற்காக கதவைத் திறந்த பயணி, சாலையில் விழுந்து உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம், அசம்கரில் இருந்து லக்னோவுக்கு அரசு 'ஏசி'பஸ் சென்றது. பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில், பிஹி கிராமம் அருகே, புகையிலை எச்சிலைத் துப்ப, ஒரு பயணி கதவைத் திறந்தார். பஸ் சென்ற வேகத்தில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாயிலாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலியானவர் லக்னோ சின்ஹாட் பகுதியைச் சேர்ந்த ராஜ் ஜியவன்,45, என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரது மனைவி சாவித்ரியும் அவருடன் பயணம் செய்தார்.
இதுகுறித்து, பல்திராய் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீரஜ் குமார் வழக்குப் பதிவு செய்து, அரசு பஸ்சை பறிமுதல் செய்தார். அதில் வந்த பயணியர் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

