ADDED : நவ 21, 2024 02:02 AM
மும்பை,
மஹாராஷ்டிராவில், ஓட்டுக்கு பணம் அளித்த விவகாரம் தொடர்பான வழக்கில் தேடப்பட்ட நபரை, குஜராத்தின் ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. முன்னதாக, மாலேகான் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் வங்கிக்கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை நடந்ததாக சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சிராஜ் அகமது ஹாரூன் மேமன் என்ற வியாபாரி, பலரது வங்கி கணக்குகளை பயன்படுத்தி, முறைகேடாக 100 கோடி ரூபாய் அளவிற்கு பண பரிவர்த்தனை செய்ததுடன், அவற்றை வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் அளிக்க பயன்படுத்தியதையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து, சட்டவிரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், மேமன் முறைகேடாக பண பரிவர்த்தனை செய்த வங்கி கணக்குகளில் ஒன்று முகமது ஷபி என்பது தெரியவந்தது. இவரது வங்கி கணக்கிற்கு மட்டும் 14 கோடி ரூபாய் அனுப்பப்பட்டதை அமலாக்கத் துறையினர் கண்டறிந்தனர்.
தலைமறைவாக இருந்த முகமது ஷபி, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீசை அமலாக்கத்துறை அளித்தது.
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற முகமது ஷபியை, குடியேற்ற அதிகாரிகள் பிடித்து, அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.