சயீபை கத்தியால் குத்தியவர் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியது அம்பலம்
சயீபை கத்தியால் குத்தியவர் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியது அம்பலம்
ADDED : ஜன 20, 2025 01:41 AM

மும்பை : நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய குற்றவாளியை, மஹாராஷ்டிராவின் தானேவில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரது பெயர் ஷரிபுல் இஸ்லாம் சேஷாத் என்றும், அவர் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவி, மும்பையில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் சயீப் அலிகான் வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக, கடந்த 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் நுழைந்தார்.
மர்மநபர்
அப்போது, திருடனை மடிக்கிப் பிடிக்க சயீப் அலிகான் முயன்றபோது நடந்த கைகலப்பில், சயீப்பை ஆறு முறை கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர் தப்பினார்.
முதுகுத்தண்டு மற்றும் கழுத்துப் பகுதியில் ஆழமான கத்திக் குத்து காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சயீப் அலிகான், அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில், கொள்ளையனை பிடிப்பதற்காக 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, மும்பை முழுதும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் கடினமான பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, கொள்ளையனின் முகச்சாயல் உடைய நபர் ஒருவர் மும்பையின் அந்தேரி டி.என்.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வதை பார்த்தனர். வாகன பதிவு எண் விபரங்களின் அடிப்படையில் விசாரணையை தொடர்ந்தனர்.
அதே நேரம், மும்பை வொர்லியின் கோலிவாடா பகுதியில் உள்ள வாடகை வீட்டில், மூன்று நபர்களுடன் கொள்ளையன் வசித்து வருவதாக போலீசாருக்கு உள்ளூர் உளவு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று விசாரணை நடத்தியதில், கொள்ளையனின் பெயர் ஷரிபுல் இஸ்லாம் சேஷாத் என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருடைய 'மொபைல் போன்' எண் கிடைத்ததை அடுத்து, அதை போலீசார் கண்காணிக்க துவங்கினர்.
மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் அந்த எண் கடைசியாக செயல்பாட்டில் இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக தானே சென்ற போலீசார் அங்குள்ள தொழிலாளர் முகாம் பகுதியை சுற்றி வளைத்தனர்.
அங்கு குற்றவாளி சேஷாத் இருக்கும் இடத்தை கண்டறிந்து, அவர் தப்பிக்க முடியாதபடி சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதற்கான ஆவணங்களை கைப்பற்றினர்.
விசாரணையின் போது, அடுக்குமாடி குடியிருப்பின் பின்பக்க படிக்கட்டு வழியாக மேலே ஏறி சென்று, குளிர்சாதன வசதிக்கான குழாய் வழியாக சயீப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்ததாக குற்றவாளி தெரிவித்துள்ளார்.
விசாரணை
மேலும், கொள்ளையடிக்க சென்றது நடிகரின் வீடு என்பது தெரியாது என்றும், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முதல்முறையாக சென்றதாகவும் அவர் விசாரணையின் போது தெரிவித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
குற்றவாளி ஷரிபுல் இஸ்லாம் சேஷாத், வேலை தேடி வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, பிஜாய் தாஸ் என்ற பெயரில் வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.