விபத்தில் சிக்கியது 'தேஜஸ்' விமானம் பாராசூட்டில் தப்பினார் பைலட்
விபத்தில் சிக்கியது 'தேஜஸ்' விமானம் பாராசூட்டில் தப்பினார் பைலட்
ADDED : மார் 13, 2024 01:11 AM

ஜெய்சல்மார், உள்நாட்டு தயாரிப்பான 'தேஜஸ்' போர் விமானம், பயிற்சியின்போது ராஜஸ்தானில் கீழே விழுந்து நொறுங்கியது; விமானி உயிர் தப்பினார். இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.
உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானம், நம் விமானப் படையில் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம் இதை தயாரிக்கிறது. தற்போதைய நிலையில், விமானப் படையில் 40 போர் விமானங்கள் உள்ளன.
ராஜஸ்தானின் பொக்ரானில் நேற்று, 'பாரத் சக்தி' என்ற பெயரில் முப்படைகளின் கூட்டுப் பயிற்சி நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக செல்லவிருந்த தேஜஸ் போர் விமானம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் அருகே நேற்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
திடீரென அந்த போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. குடியிருப்பு பகுதிக்குள், விடுதி கட்டடம் ஒன்றின் மீது அது விழுந்து நொறுங்கியது. இதில், அது தீப்பிடித்து எரிந்தது.
முன்னதாக விமானி அவசர வழியை பயன்படுத்தி, அதில் இருந்து வெளியேறினார். பாராசூட் வாயிலாக இறங்கிய அவர், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
தேஜஸ் ரக போர் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்குவது இதுவே முதல் முறை. இது தொடர்பாக விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டுள்ளது.
விடுதி கட்டடத்தில் யாரும் இல்லாததால், இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என, ராஜஸ்தான் போலீசார் கூறினர்.
நம் விமானப் படையின் முக்கிய துருப்புச்சீட்டாக விளங்கும் தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள் 83 வாங்குவதற்கு, 2021ல் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு, 48,000 கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, கூடுதலாக 97 விமானங்கள் வாங்குவதற்கு, கடந்தாண்டு நவம்பரில் முதற் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

