சட்டவிரோத முதியோர் இல்லத்தில் உடை இல்லாமல் இருந்த அவலம்
சட்டவிரோத முதியோர் இல்லத்தில் உடை இல்லாமல் இருந்த அவலம்
ADDED : ஜூன் 27, 2025 08:31 PM
நொய்டா:நொய்டாவில், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட முதியோர் இல்லத்தில், மூதாட்டி கட்டிப்போடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், நொய்டா 55வது செக்டாரில் உள்ள ஆனந்த் நிகேதன் சேவா ஆசிரமத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஒரு மூதாட்டி கட்டிப்போடப்பட்டு இருந்தார். மேலும், காற்று வசதி இல்லாத இருண்ட அறைகளில் முதியோர் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அதில், சில முதியோர் உடை கூட இல்லாமல் நிர்வாணமாக இருந்தனர். பல மூதாட்டியர் அரைகுறை ஆடை அணிந்து இருந்தனர்.
உ.பி., மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மீனாட்சி பரலா கூறியதாவது:
இந்த முதியோர் இல்லம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து, 42 முதியோர் மீட்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத்துறை நடத்தும் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவர்.
ஆனந்த் நிகேதன் சேவா ஆசிரமத்துக்கு, 'சீல்' வைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.