காங்., பெண் நிர்வாகிகள் அறைகளில் நள்ளிரவில் போலீசார் திடீர் சோதனை
காங்., பெண் நிர்வாகிகள் அறைகளில் நள்ளிரவில் போலீசார் திடீர் சோதனை
ADDED : நவ 07, 2024 06:49 AM

பாலக்காடு ; கேரள மாநிலம், பாலக்காடு காங்., - எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில், லோக்சபா தேர்தலில் வடகரை தொகுதி எம்.பி.,யானார்.
இதையடுத்து, வரும் 20ம் தேதி பாலக்காடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்., வேட்பாளராக ராகுல் மாங்கூட்டம், பா.ஜ., வேட்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலர் கிருஷ்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளராக சரின் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்காக காங்., கட்சியினர் கருப்பு பணம் கொண்டு வந்துள்ளதாக, திடீரென வதந்தி பரவியது. அதையடுத்து, நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, மாநில காங்., பெண் நிர்வாகிகளான பிந்து கிருஷ்ணா, ஷானிமோள் உஸ்மான் ஆகியோர் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் போலீசார் சோதனை நடத்தினர். எனினும், இந்த சோதனையில் பணம் எதுவும் கிடைக்கவில்லை.
தகவல் அறிந்து, காங்., கட்சியினர் ஹோட்டல் முன் திரண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பா.ஜ., கட்சியினரும் ஹோட்டல் முன் திரண்டு, காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கி இருக்கும் அனைத்து அறைகளையும் சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், மூன்று கட்சியினர் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியினர் அனைவரையும் அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.
இந்நிலையில், போலீஸ் நடத்திய சோதனையை கண்டித்து, நேற்று காலை 11:30 மணிக்கு பேரணியாக வந்த காங்., கட்சியினர், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.