தோழியை ஆபாச படம் எடுத்து மிரட்டியவருக்கு போலீசார் வலை
தோழியை ஆபாச படம் எடுத்து மிரட்டியவருக்கு போலீசார் வலை
ADDED : நவ 03, 2024 11:44 PM
ராஜராஜேஸ்வரி நகர்; நண்பர் என நம்பி தன் மொபைல் போன் கொடுத்த பெண், தற்போது தர்மசங்கடத்தில் சிக்கி தவிக்கிறார்.
பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகரில் வசிக்கும், 28 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் திருமணமானவர். இதே நிறுவனத்தில் சஞ்சய், 34, என்பவர் பணியாற்றுகிறார். ஒரே இடத்தில் பணியாற்றுவதால், இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பல இடங்களுக்கு சேர்ந்து சென்றுள்ளனர்.
சஞ்சய், சமீபத்தில் ஏதோ காரணத்தை கூறி, பெண்ணின் மொபைல் போனை வாங்கினார். அதில் ஒரு செயலியை, 'டவுன்லோட்' செய்துள்ளார். இதை அந்த பெண் கவனிக்கவில்லை. ஒரு நாள் அவர் குளிக்க சென்ற போது, போன் வரக்கூடும் என, நினைத்து மொபைல் போனை குளியலறைக்குள் கொண்டு சென்றார். அங்கு வைத்து விட்டு குளித்துள்ளார்.
அப்போது அவரது போனில் இருந்த செயலி மூலமாக, சஞ்சய், தன் மொபைல் போனில் இருந்தே, பெண்ணின் நிர்வாண வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இது, அப்பெண்ணுக்கு தெரியவில்லை. சில நாட்களில் அந்த வீடியோவை, சஞ்சய் அப்பெண்ணின் மொபைல் போனுக்கு அனுப்பினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தன் நிர்வாண வீடியோ எப்படி வந்தது என தெரியாமல் குழம்பினார்.
சமீபத்தில் தன் மொபைல் போனை, சஞ்சய் பயன்படுத்தியது நினைவுக்கு வந்தது. அவரது போனை ஆய்வு செய்த போது, தன் நிர்வாண வீடியோக்கள் இருப்பது தெரிந்தது. இது பற்றி கேள்வி எழுப்பிய போது, சஞ்சய், 'என் ஆசைக்கு இணங்க வேண்டும் அல்லது உன் கணவரை விட்டு விட்டு, என்னுடன் வர வேண்டும். இல்லா விட்டால் இந்த வீடியோவை உன் கணவருக்கு அனுப்புவேன்' என மிரட்டினார்.
இதனால், ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில், அப்பெண் புகார் அளித்துள்ளார். புகார் பதிவானதும், சஞ்சய் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.