ADDED : பிப் 03, 2025 05:03 AM

கலபுரகி; ''நான் மன நலம் பாதித்து, முதல்வரின் அரசியல் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. என் தொகுதிக்கு எதையும் செய்ய முடியவில்லை என்பதால், ராஜினாமா செய்தேன்,'' என ஆளந்தா தொகுதி காங்., - எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சர் பதவிக்கு நெருக்கடி கொடுக்கவோ அல்லது பிளாக்மெயில் செய்யவோ நான், முதல்வரின் அரசியல் ஆலோசகர் பதவியை, ராஜினாமா செய்யவில்லை. அவ்வளவு கீழ்த்தரமாக நான் அரசியல் செய்ய மாட்டேன்.
எம்.எல்.ஏ.,வானதே பெரிய அதிர்ஷ்டம். அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. நான் மன நலம் பாதித்து, முதல்வரின் அரசியல் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. என் தொகுதிக்கு எதையும் செய்ய முடியவில்லை என்பதால், ராஜினாமா செய்தேன்.
வாக்குறுதி திட்டங்களுக்கு, பெருமளவில் செலவிடுவதால், தொகுதி மேம்பாட்டுக்கு நிதியுதவி கிடைப்பது இல்லை. இது என் ஒருவனின் பிரச்னை அல்ல. பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் இதே பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
நான் இதற்கு முன்பே, முதல்வரின் அரசியல் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, நினைத்திருந்தேன். முக்கியமான பதவியில் இருந்தும், என்னால் தொகுதிக்கு எதையும் செய்ய முடியவில்லை. இதுவே என் ராஜினாமாவுக்கு காரணம்.
கட்சியில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. தேவையின்றி தவறான அர்த்தத்தை ஏற்படுத்தாதீர்கள். நான் என்ன சொல்ல வேண்டுமோ, அதை முதல்வரிடம் விவரித்துள்ளேன். நேற்று (முன்தினம்) மைசூரில் முதல்வர் சித்தராமையா, என்னை அழைத்து பேசுவதாக கூறியிருந்தார். அழைத்தால் சென்று பேசுவேன். ஆனால், ராஜினாமாவை திரும்ப பெற மாட்டேன்.
குடும்பம் என்றால் பிரச்னைகளும் இருக்கும். அரசில் இருக்காதா. என் மனதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடையது இந்தியா, பாகிஸ்தான் யுத்தமா என்ன.
நான் முதல்வர் சித்தராமையாவின் நண்பர் என்பதால், அவரது அரசியல் ஆலோசகராக என்னை நியமித்தார். என்னை விட அவருக்கு, நிர்வாகத்தில், அரசியலில் அதிக அனுபவம் உள்ளது. என் ஆலோசனை அவருக்கு அவசியம் இல்லை.
மாநில அரசின் எந்த கோரிக்கைகளையும், மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. ஏதோ பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக, தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

