துவங்கியது பிரச்னை: மெட்ரோ பணிக்கு வெளிமாநில ஆட்களை அமர்த்த எதிர்ப்பு: தலைமை அலுவலகம் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்
துவங்கியது பிரச்னை: மெட்ரோ பணிக்கு வெளிமாநில ஆட்களை அமர்த்த எதிர்ப்பு: தலைமை அலுவலகம் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்
ADDED : மார் 18, 2025 05:14 AM

பெங்களூரின் செல்லகட்டா - ஒயிட்பீல்டு; சில்க் இன்ஸ்டிடியூட் - மாதவரா இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே பணிகள் முடிந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் ரயில் சேவை துவங்க வாய்ப்பு உள்ளது.
தற்போது வரை மெட்ரோ ரயில்களை இயக்கும் ஓட்டுநர்கள் அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்களே.
இந்நிலையில் மெட்ரோ நிறுவனம் 50 ரயில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், கன்னடம் தெரியாதவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் ஓராண்டுக்குள் கன்னடம் கற்று, மெட்ரோ நிறுவனம் நடத்தும் கன்னட தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்புக்கு மெட்ரோ ஊழியர்கள் சங்க தலைவர் சூர்ய நாராயணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தடுத்து நிறுத்தம்
மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது, கன்னட அமைப்பினரும் வெகுண்டு எழுந்துள்ளனர். ரயில் ஓட்டுநர் பணிக்கு வெளிமாநில ஆட்களை சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதற்காக வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெங்களூரு சாந்திநகரில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை அலுவலகம் முன், கன்னட அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
பின், அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அங்கு வந்த மெட்ரோ ரயில் நிர்வாக கழக எம்.டி., மகேஸ்வர ராவிடம், 'நீங்கள் வெளியிட்டுள்ள விண்ணப்பத்தை பார்க்கும்போது, சென்னை, ஹைதராபாத் மெட்ரோவில் பணியாற்றும் நபர்களை, இங்கு பணி அமர்த்த திட்டமிட்டு போன்று தெரிகிறது. கன்னடர்களுக்கு அநீதி இழைக்க வேண்டாம்.
கன்னடர் அல்லாதவர்களை பணிக்கு சேர்க்க வேண்டும் என்று, விதிமுறை எதுவும் உருவாக்கி உள்ளீர்களா?' என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த பணி
கன்னட அமைப்பினரை, மகேஸ்வர ராவ் சமாதானம் செய்தார்.
'நாங்கள் இப்போது நடத்தியது அமைதியான போராட்டம். ஓட்டுநர் பணிக்கு கன்னடர்களை அனுமதிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்' என எச்சரித்துவிட்டு, கன்னட அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.