பொம்மை முதல்வருக்கு இதுதான் தெரியும்; டில்லி முதல்வருக்கு பா.ஜ., பதிலடி
பொம்மை முதல்வருக்கு இதுதான் தெரியும்; டில்லி முதல்வருக்கு பா.ஜ., பதிலடி
UPDATED : அக் 20, 2024 05:55 PM
ADDED : அக் 20, 2024 05:47 PM

புதுடில்லி: டில்லியில் பள்ளி வெடிகுண்டு சம்பவம் குறித்து டில்லி முதல்வர் அதிஷி மத்திய அரசை விமர்சித்ததற்கு, பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
டில்லி, ரோகினி மாவட்டத்தில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில், சி.ஆர்.பி.எப்., பப்ளிக் பள்ளி அருகே இன்று (அக்., 20) காலை 7.47 மணிக்கு குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி திறப்பிற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளதால், எந்த உயிர்ச்சேதமோ, காயமே ஏற்படவில்லை. ஆனால், சி.ஆர்.பி.எஃப். பள்ளியின் சுற்றுச் சுவர் சேதமடைந்தும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தும், கடைகளின் பெயர்ப்பலகைகள் சேதமடைந்தன.
பள்ளியில் அரங்கேறிய இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக டில்லி போலீஸின் சிறப்பு பிரிவு, என்.ஐ.ஏ., சி.ஆர்.பி.எப்., மற்றும் என்.எஸ்.ஜி., உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள மத்திய பா.ஜ., அரசு தான் பொறுப்பு என்று டில்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டினார். ஆனால், மத்திய பா.ஜ., அரசு இதனை மறுப்பதாகவும், இதனை பயன்படுத்தி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், டில்லி மக்களின் சுகாதாரத்துறை, மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்டவை தப்பித் தவறி மத்திய பா.ஜ., அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றால், இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கும் என்றும் டில்லி முதல்வர் அதிஷி விமர்சித்தார்.
டில்லி முதல்வரின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., நிர்வாகி ஷாஷியா இல்மி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, 'பொம்மை முதல்வருக்கு இதுதான் தெரியும். ஏதாவது தலைப்பு பற்றி பேசுங்கள் என்று சொன்னாலே, அவர் மத்திய அரசை பற்றி மட்டும் தான் பேசுவார். மிகவும் விபரீதமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வேதனையை வெளிப்படுத்தாமல், அரசியல் ஆதாயம் தேடுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். முதல்வர் அதிஷியின் இந்தப் பேச்சு, அரசியல் பக்குவமில்லாததை காட்டுகிறது,' எனக் கூறினார்.