ADDED : டிச 31, 2024 05:31 AM

ஹாசனில் உள்ள புராதன பிரசித்தி பெற்ற புரதம்மா கோவில் பக்தர்களை சுண்டி இழுக்கிறது. குறிப்பாக, அரசியல்வாதிகள், நடிகர், நடிகையருக்கு பிடித்தமான கோவில்.
ஹாசனின் சாலகாமே பேரூராட்சியின் பீகனஹள்ளி கிராமத்தில், சவுடேஸ்வரி புரதம்மா கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் 200 ஆண்டுகள் பழமையானது. அக்கம், பக்கத்து கிராமத்தினர் புரதம்மா என அழைக்கின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். கேட்ட வரம் கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதே காரணத்தால் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், பக்தர்கள் சவுடேஸ்வரி புரதம்மாவை தேடி வருகின்றனர்.
ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில், அதிகமான பக்தர்கள் வருகின்றனர். தங்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்யும்படி பிரார்த்தனை செய்து, பூட்டு போட்டு, தகடு கட்டுகின்றனர்.
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், புரதம்மாவை தரிசிக்க மறப்பதில்லை. இங்கு வந்து தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்கின்றனர்.
அம்பாளை தரிசனம் செய்தால் வெற்றி கிடைக்கும் என, நம்புகின்றனர்.அதேபோன்று நடிகர், நடிகையர் தங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என, வேண்டுதல் வைக்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறினால், கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். அங்கேயே அசைவ உணவு சமைத்து சாப்பிடுவோரும் உண்டு.
விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இவர்களுக்காகவே கோவில் சுற்றுப்பகுதிகளில் கட்டடங்கள் உள்ளன. இவற்றில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. குடும்பங்களுடன் வருவோருக்கும் உதவியாக உள்ளன.
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை கோவிலில் தரிசிக்கலாம். கோவிலை பற்றி கூடுதல் தகவல் வேண்டுவோர் 98456 31863 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.