ADDED : மார் 07, 2024 04:14 AM

ககலிபுரா : வாலிபர்களை தாக்கி மொபைல் போனை பறித்த ரவுடி, போலீசாரை தாக்கி தப்ப முயன்றார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பெங்களூரு, ககலிபுரா அருகே சுடஹள்ளி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 1ம் தேதி இரவு விக்னேஷ், 25, இவரது நண்பர்கள் அபிஷேக், 25, ராகுல், 26, வருண், 25, ஆகியோர் பார்ட்டி நடத்த தயாராக இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ரவுடி சைக்கிள் கிரி, 27, அவரது கூட்டாளிகள் ஆறு பேர், கத்தி, அரிவாள், இரும்பு கம்பியை காண்பித்து மிரட்டினர். விக்னேஷ், அவரது நண்பர்களின் மொபைல் போன்களை பறித்தனர்.
விக்னேஷின் தலையில் பீர் பாட்டிலால் அடித்தனர். அவரது நண்பர்களையும் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து ககலிபுரா போலீசார் விசாரித்தனர்.
நேற்று முன்தினம் கோனனகுண்டே கிராசில், சைக்கிள் கிரி கைது செய்யப்பட்டார். வாலிபர்களை மிரட்ட பயன்படுத்திய, ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, நேற்று காலை சுடஹள்ளி கிராமத்திற்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீஸ் ஏட்டு பரலிங்கப்பாவை, 35, சைக்கிள் கிரி ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றார். அதிர்ச்சி அடைந்த எஸ்.ஐ., லோகேஷ், துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார்.
ஆனால் சரண் அடைய மறுத்த சைக்கிள் கிரி, இன்னொரு ஏட்டு முரளிதரையும் தாக்க முயன்றார். இதனால் சைக்கிள் கிரியின் வலது காலில், எஸ்.ஐ., லோகேஷ் துப்பாக்கியால் சுட்டார்.
காலில் குண்டு துளைத்ததில் அவர் சுருண்டு விழுந்தார். சைக்கிள் கிரியும், ஏட்டு பரலிங்கப்பாவும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

