பெண்களுக்கு பயன் அளிக்கும் 'சக்தி' திட்டம்... நிறுத்தப்படாது! போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி உறுதி
பெண்களுக்கு பயன் அளிக்கும் 'சக்தி' திட்டம்... நிறுத்தப்படாது! போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி உறுதி
ADDED : நவ 03, 2024 11:37 PM

பெங்களூரு; ''பெண்களுக்கு பயன் அளிக்கும் சக்தி திட்டம் நிறுத்தப்படாது,'' என்று, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி உறுதி அளித்து உள்ளார். திட்டம் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வரும்படி, எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கும் சவால் விடுத்து உள்ளார்.
கர்நாடகாவில், 'சக்தி' திட்டம் என்ற பெயரில், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் உள்ளது. கர்நாடகாவில் வசிக்கும் பெண்கள், ஆதார் அட்டையை காண்பித்து ஜீரோ டிக்கெட் வாங்கி, இலவச பயணம் செய்யலாம். இந்த திட்டத்தை பயன்படுத்தி, ஆன்மிக தலங்களுக்கு செல்ல முடிவதால், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டியில், ''எனக்கு சில பெண்கள் மின்னஞ்சல், வாட்ஸாப் மூலம் குறுந்தகவல் அனுப்பி, எங்களுக்கு இலவச பஸ் பயணம் வேண்டாம். பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து செல்கிறோம் என்கின்றனர்,'' என, கூறி இருந்தார்.
சிவகுமாரின் கருத்து, சக்தி திட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சி என்று, எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்தனர். எந்த நேரத்திலும் சக்தி திட்டம் நிறுத்தப்படலாம் என்றும் கூறி இருந்தனர்.
பட்டியல்
இதற்கிடையில், பெங்களூரு வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சக்தி திட்டம் குறித்து கருத்து தெரிவித்த, சிவகுமாரை கண்டித்தார். சுதாரித்து கொண்ட அவர், ''சக்தி திட்டம் உட்பட ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் நிறுத்த மாட்டோம்,'' என்று கூறினார். ஆனாலும் பெண்கள் மத்தியில், சக்தி திட்டம் நிறுத்தப்படுமோ என்ற ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் வகையில், சக்தி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. எக்காரணம் கொண்டும் திட்டத்தை நிறுத்த மாட்டோம்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கும், அவரது பா.ஜ., கட்சிக்கும், 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக பதிவிடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது. பா.ஜ., ஆட்சியின் போது போக்குவரத்து துறை மேம்பாட்டிற்காக என்ன செய்தனர் என்று அசோக் பட்டியல் கொடுக்க வேண்டும். அந்த பட்டியலை வைத்து, அசோக்குடன் நேரடி விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன். அவர்களை போல நாங்கள் காற்றில் சுடவில்லை. வேலை செய்து உள்ளோம்.
புதிய பஸ்கள்
போக்குவரத்து துறை பா.ஜ., ஆட்சி காலத்தில் ஸ்தம்பித்து போய் இருந்தது. இதுபற்றி அசோக்கிற்கு நன்கு தெரியும். சக்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின், தினசரி பயணியர் எண்ணிக்கை 84 லட்சத்தில் இருந்து 1.08 கோடியாக அதிகரித்து உள்ளது. நான்கு போக்குவரத்து கழகங்களுக்கும் கணிசமான வருவாய் உள்ளது.
வருமானம், லாபம் என்பது வேறு, வேறு. பா.ஜ., ஆட்சியில் போக்குவரத்து கழகங்களுக்கு 5,900 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
பி.எம்.டி.சி., போக்குவரத்து கழகத்தை தவிர, மற்ற மூன்று கழகங்களுக்கு புதிய பஸ்களை, அவர்கள் வாங்கவே இல்லை. ஆனால் எங்கள் அரசு வந்ததும் 6,200 புதிய பஸ்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் 3,400 பஸ்கள் வாங்கி உள்ளோம். பழைய பஸ்களை சீரமைக்கும் பணியும் நடக்கிறது.
பா.ஜ., ஆட்சியில் போக்குவரத்து நிறுவனங்களில் 13,888 பணியிடங்கள் காலியாக இருந்தன. ஒரு நியமனம் கூட வழங்கவில்லை. எங்கள் அரசு 9,000 பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளித்து உள்ளது. பா.ஜ., ஆட்சியில் போக்குவரத்து ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை முழுமையாக கூட வழங்கவில்லை. ஒரு மாத சம்பளம், இன்னொரு மாதம் கிடைத்தது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையில் பணி வழங்குவது அதிகரித்து உள்ளது. சக்தி திட்டத்தை செயல்படுத்த கஷ்டமாக உள்ளது என்று நான் எங்கும் கூறவில்லை. மக்களை திசைதிருப்ப பா.ஜ., தலைவர்கள் தினம் ஏதாவது ஒன்று பேசுவர். மக்களுக்கு தீங்கு செய்ய நினைக்க வேண்டாம். முடிந்தால் நல்லது செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.