மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்காத 'சிம்லா ஒப்பந்தம்': 1971 முதல் இன்று வரை பின்பற்றியதா பாகிஸ்தான்?
மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்காத 'சிம்லா ஒப்பந்தம்': 1971 முதல் இன்று வரை பின்பற்றியதா பாகிஸ்தான்?
ADDED : ஏப் 28, 2025 06:40 AM

காஷ்மீரில் சுற்றுலா பயணியர் ஒவ்வொருவர் பெயர் கேட்டு, மதம் அறிந்து, படுகொலையை செய்தனர், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள். அங்கு ரத்த ஆறு ஒழுகியதன் ஈரம் காயும் முன்பே, நாங்கள் உத்தமர்கள் என கூறி எல்லையில், பாகிஸ்தான் தொடர் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்தியா அறிவித்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் தடை, துாதரக ரீதியிலான கட்டுப்பாடுகள், பாகிஸ்தானியர் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு ஆகியவற்றை கண்டு வெகுண்டு எழுந்து, 1971ம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் ரத்து என பாகிஸ்தான் அறிவித்தது.
பாகிஸ்தானை பொறுத்தவரை இம்முடிவு, 'புது குண்டு' ஆக இருந்தாலும், நம்மை பொறுத்தவரை அது நமுத்துப்போன பட்டாசாக தான் கருத முடியும். காரணம், சிம்லா ஒப்பந்தம் என்பதால், யாருக்கு லாபம்? அதன் பலனை அனுபவிப்பது பாகிஸ்தான் தான்.
'சிம்லா ஒப்பந்தம்' நீண்டகால ஒப்பந்தமாக கருதப்படவில்லை.- அதில், பெரும்பாலானவை - பாகிஸ்தானிய போர்க் கைதிகளைத் திரும்பப் பெறுதல், வர்த்தகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பது போன்ற உடனடி நடவடிக்கைகள் தான்.
ஒப்பந்தத்தை மீறியது யார்?
இரு நாடுகள் இடையே மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கையெழுத்திடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் எப்போதாவது முழுமையாக பின்பற்றியது உண்டா? எத்தனை முறை தான் விதிமீறல்...
இந்திராவும், சுல்பிகர் அலி புட்டோவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திரும்பி சில மாதங்களிலேயே, காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆயுதம் வழங்கியது பாகிஸ்தான். கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால், படைகளை அனுப்புவதன் வாயிலாக பாகிஸ்தான் பல முறை ஒப்பந்தத்தை மீறியது. அது மட்டுமின்றி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உரமூட்டி வளர்த்து, தீவிரவாதிகளுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்கி அனுப்பி வைத்தது பாகிஸ்தான்.
ஆபரேஷன் மேகதுாத்
மேலும், சிம்லா ஒப்பந்தத்தின் விதிகளை, மாற்றவும் முயன்றது. உலகின் மிக உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறையை பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பல முறை முயன்றது. 1984ம் ஆண்டு, இந்தியா 'ஆபரேஷன் மேகதுாத்' எனும் ராணுவ நடவடிக்கையைத் மேற்கொண்டு, பனிப்பாறையின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசமாக்கியது.
இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் இணைந்து, தொடர் கண்காணிப்பின் வாயிலாக சியாச்சினின் பனி சிகரங்களில் இந்திய கொடியை பறக்கவிட்டுள்ளது. இந்த ராணுவ பாதுகாப்பு என்பது உலகின் மிக உயர்ந்த பகுதியில் நடக்கும் தொடர் ராணுவ நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட அனைத்து காஷ்மீர் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என, 1994ல் இந்திய பார்லிமென்ட் அறிவித்தது.
![]() |
கார்கில் போர்
வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற பின், பாகிஸ்தானுடன் பல்வேறு சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனினும், கடந்த 1999ல், நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் மூளையாக செயல்பட, கார்கில் போருக்கு பாக்., வழிவகுத்தது. கார்கிலில் 150 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள பகுதிகளை, பாகிஸ்தான் நயவஞ்சமாக தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்காக பாகிஸ்தான் எடுத்த முடிவு, ஒரு கொடூரமான மோதலுக்கு வழிவகுத்தது. இதில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியா வெற்றிகரமாகக் கைப்பற்றியது. அதை நாம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக (விஜய் திவஸ்) கொண்டாடி வருகிறோம்.
ஓய்ந்த வெடிசத்தம்
கடந்த 2003ம் ஆண்டில், கார்கில் மோதலுக்கு, நான்கு ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இந்தியா மீது பகமை பாராட்டிய பாக்., சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப் கூட இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கடந்த 2003 முதல் 2005 வரை எல்லையில் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை. ஆனால், 2006 முதல் பாகிஸ்தான் மீண்டும் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.
கடந்த 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின், பாகிஸ்தானுடன் பகைமை மறந்து நட்புக்கரம் நீட்டினார். மீண்டும் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை, அவரது சொந்த பூமிக்கே தேடிச் சென்று நட்பு பாராட்டினார். ஆனால், அதற்குப்பின், இன்று வரை பாகிஸ்தான் செய்தது என்ன?
நாங்க ரெடி; நீங்க ரெடியா!
சிம்லா ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ நோக்கம், இரு நாடுகளும் இதுவரை தங்கள் உறவுகளைச் சீர்குலைத்துள்ள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான். இந்த ஒப்பந்தம், போரின்போது பாகிஸ்தானில் இந்திய ராணுவம் கைப்பற்றிய, 13 ஆயிரம் சதுர கி.மீ.,க்கும் அதிகமான நிலத்தைத் திருப்பித் தந்தது.
மேலும், சிம்லா ஒப்பந்தத்தில் முதலில் குறிப்பிடப்பட்ட கட்டுப்பாட்டு எல்லைக் கோடு என்ற ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இப்போது நிராகரித்துவிடுமா? ஒரு வேளை பாகிஸ்தான் அதை மீற முயன்றால், இந்தியா கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைப் புறக்கணித்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் (பி.ஓ.கே.,) முழு பகுதிகளையும் உரிமை கொண்டாடலாம். அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடும். சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானுக்கு சொந்த காலில் சூனியம் வைத்த கதை ஆகி விடக்கூடாது.
- நமது நிருபர் -