இரு மாவட்டங்களை இணைக்கும் சிவபுரா தொங்கு பாலம் இரு மாவட்டங்களை இணைக்கும்
இரு மாவட்டங்களை இணைக்கும் சிவபுரா தொங்கு பாலம் இரு மாவட்டங்களை இணைக்கும்
ADDED : டிச 26, 2024 06:34 AM

உத்தர கன்னடாவின் யல்லாபுரா தாலுகா கட்டிகே கிராமத்தில் உள்ளது கோடசள்ளி நீர்தேக்கம். இந்த நீர்தேக்கத்தின் பின்பகுதியில் 234 மீட்டர் நீளத்தில் தொங்கு பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் பெயர் சிவபுரா.
இந்த பாலம் உத்தர கன்னடா - சிக்கமகளூரு மாவட்டங்களை விரைவாக இணைக்கிறது. இந்த பாலமும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் சுற்றுலா தலமாக உள்ளன.
உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோர், காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டால், இந்த தொங்கு பாலத்திற்கும் டிரைவர்கள் தவறாமல் அழைத்துச் செல்கின்றனர். பாலத்தில் நடந்து சென்றபடி, இயற்கை அழகை ரசிப்பது மனதிற்கு அமைதி தரும். பாலத்தில் சைக்கிள், பைக் ஓட்டிச் செல்லவும் அனுமதி உள்ளது.
இயற்கை எழில் நிறைந்த பகுதி என்பதால், புகைப்பட பிரியர்களுக்கு இந்த இடம் சொர்க்கமாக இருக்கும். மழை நேரங்களில் இப்பகுதிகளுக்கு சென்றால் ரம்மியமான சூழ்நிலையை அனுபவித்து வரலாம்.
பெங்களூரில் இருந்து சிக்கமகளூருக்கு, பைக்கில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வோர், இந்த பாலத்தை கடந்து உத்தர கன்னடா மாவட்டத்திற்கு எளிதாக செல்லலாம். பாலத்தை கடந்த பின், வனப்பகுதி சாலைக்குள் பைக் ஓட்டி செல்வதும் புதிய அனுபவமாக இருக்கும்.
பெங்களூரில் இருந்து யல்லாபுரா 430 கி.மீ., துாரத்தில் உள்ளது. யல்லாபுராவில் இருந்து இந்த பாலம் 20 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து யல்லாபுராவுக்கு நேரடி அரசு பஸ் சேவை உள்ளது.
ரயிலில் செல்வோர் அங்கோலா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்
. - நமது நிருபர் -

