மாநிலமே கொந்தளிக்கிறது; மவுனமாக இருந்து தட்டிக் கழிப்பதா: மம்தாவுக்கு கவர்னர் கண்டிப்பு
மாநிலமே கொந்தளிக்கிறது; மவுனமாக இருந்து தட்டிக் கழிப்பதா: மம்தாவுக்கு கவர்னர் கண்டிப்பு
ADDED : செப் 09, 2024 11:36 AM

கோல்கட்டா: '' மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள விஷயத்தில் மாநில அரசு அமைதியாக இருந்து பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கவர்னர் ஆனந்த போஸ் கண்டித்துள்ளார்.
கோல்கட்டாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் இளம் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு, பொது மக்கள் மற்றும் டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுக்கு ஆனந்த போஸ் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநில அமைச்சரவை உடனடியாக கூடி, மக்கள் போராட்டம் குறித்து விவாதிப்பதுடன், அவர்களின் கோரிக்கையை ஏற்று கோல்கட்டா போலீஸ் கமிஷனரை மாற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள விஷயத்தில் மாநில அரசு அமைதியாக இருந்து பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. அரசியல் சாசனப்படி, சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெற்றோர் குற்றச்சாட்டு
இளம் பயிற்சி மருத்துவரின் பெற்றோர் கூறுகையில், '' ஆரம்பம் முதலே போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை. ஆதாரங்களை அழிக்கவே முயற்சி செய்தனர். அனைவரும் எங்களுடன் இருக்க வேண்டும். நீதி எளிதில் கிடைத்து விடாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எங்களுடன் இருப்பவர்களே எனது பலமாக நினைக்கிறேன். தவறான தகவல்களை பரப்பி, வழக்கை திசை மாற்ற கோல்கட்டா போலீஸ் கமிஷனர் முயற்சி செய்தார்.''. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
25 நாடுகளில் போராட்டம்
இதனிடையே, பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டம் இந்தியாவில் இருந்து பரவி 25 நாடுகளில் 130 நகரங்களில் நடந்தது. ஜப்பான், ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூரில் முதலில் சிறிய அளவில் துவங்கிய இந்த போராட்டம்,பிறகு படிப்படியாக ஐரோப்பா கண்டத்திற்கு பரவியது. அமெரிக்காவில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
சிபிஐ அறிக்கை தாக்கல்
இந்நிலையில் பெண் டாக்டர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.