258 ஆண்டாக கரைக்கப்படாமல் மக்களால் வழிபடும் துர்காதேவி சிலை
258 ஆண்டாக கரைக்கப்படாமல் மக்களால் வழிபடும் துர்காதேவி சிலை
ADDED : செப் 29, 2025 12:06 AM

வாரணாசி: உத்தர பிரதேசத்தில், துர்கா பூஜையையொட்டி நிறுவப்பட்ட துர்காதேவி சிலை, 258 ஆண்டுகளுக்கும் மேலாக கரைக்கப்படாமல், ஒரே இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
உ.பி.,யின் வாரணாசி மாவட்டத்தில் 1767ல், துர்கா பூஜை பண்டிகையையொட்டி, முகோபாத்பாய் என அழைக்கப்பட்ட முகர்ஜி குடும்பத்தினர், துர்காதேவி சிலையை வைத்து வழிபட்டனர்.
வைக்கோல், மூங்கில், சணல் கயிறு, களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட, 6 அடி உயர துர்காதேவி சிலையை, விஜய தசமி நாளன்று ஆற்றில் கரைக்க ஆயத்தமாகினர்.
ஆனா ல், அந்த சிலையை ஓர் அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. இதை அடுத்து, சிலையை துாக்கிச் செல்ல, 15க்கும் மேற்பட்ட பயில்வான்கள் அழைக்கப்பட்டனர்.
கயிறுகளைக் கட்டி சிலையை நகர்த்த முயற்சித்தனர்; ஆனால் முடியவில்லை. இது அங்கிருந்த அனைவரையும் வியப்பிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியது.
அன்றிரவு, முகர்ஜி குடும்பத்தின் தலைவர் காளி பிரசன்ன முகர்ஜியின் கனவில், துர்காதேவி தோன்றி, 'நான் சிவனின் இருப்பிடமான காசியில் மகிழ்ச்சியுடன் உள்ளேன். என்னை இங்கிருந்து அகற்ற வேண்டாம்; காசி மக்களுடன் நிரந்தரமாக இ ங்கேயே இருக்க விரும்புகிறேன்' என, ஆணையிட்ட தாக நம்பப்படுகிறது.
இதை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர், அன்றிலிருந்து இன்று வரை அந்தச் சிலையை அங்கேயே வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இதன்படி, 1767 முதல், அந்தச் சிலையை அக் குடும்பத்தினர் வழிபாடு செய்து வருகின்றனர். வாரணாசியின் காசியில் உள்ள பெங்காலி டோலா பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், 'துர்கா தேவியின் பழைய வீடு' என, அழைக்கப்படுகிறது.
துர்கா பூஜை பண்டிகையின் போ து, புதிய சிலை செய்து, விஜயதசமி அன்று ஆற்றில் கரைக்கும் வழக்கம் நாடு முழுதும் உள்ள நிலையில், முகர்ஜி குடும்பத்தினர் மட்டும் காலங்காலமாக இந்த ஒரே சிலையை வழிபட்டு வருகின்றனர் .
கோவிலில், துர்காதேவி சிலையுடன், 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிலை மற்றும் பூமிக்கு அடியில் கண் டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 22 சிவலிங்கங்களும் வழி படப்படுகின்றன.