சத்தீஸ்கர் போலீஸ் என்கவுன்டரில் 16 நக்சல்கள் கதை முடிந்தது
சத்தீஸ்கர் போலீஸ் என்கவுன்டரில் 16 நக்சல்கள் கதை முடிந்தது
ADDED : ஜன 22, 2025 02:51 AM

கரியாபந்த், சத்தீஸ்கர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், தலைக்கு 1 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு இருந்த முதன்மை கமாண்டர் உட்பட 16 நக்சல்கள் பலியாகினர்.
சத்தீஸ்கர் - ஒடிசா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. குலாரிகாட் எனப்படும் இங்கு, ஏராளமான நக்சல்கள் பதுங்கியிருப்பதாக சத்தீஸ்கர் அரசுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது.
இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை, கமாண்டோ பிரிவினர், சிறப்பு நடவடிக்கை குழு ஆகியோர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கடந்த, 19ம் தேதி நள்ளிரவு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
துப்பாக்கி சண்டை
அப்போது, அங்கு பதுங்கியிருந்த இரண்டு பெண் நக்சல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். கமாண்டோ வீரர் ஒருவர் காயமடைந்தார். தப்பிய நக்சல்களை தேடும் பணி நள்ளிரவிலும் தொடர்ந்தது.
அப்போது, அடர்ந்த வனப் பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருந்த இடத்துக்கு பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை சென்றடைந்தனர்.
பதுங்கி இருந்த நக்சல்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நக்சல்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இறுதியில், நக்சல்களின் முக்கிய தளபதியான ஜெய்ராம் ரெட்டி என்ற சலபதி, 60, உட்பட 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேடுதல் பணி
நக்சல்களின் மூத்த தலைவரான அவர், முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜெய்ராம் ரெட்டியை பிடித்து தருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இவருடன் பலியான பிற நக்சல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடங்களில் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பல நக்சல்கள் பதுங்கியிருக்கலாம் என்பதால் அங்கு தேடுதல் பணி தொடர்கிறது.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு மட்டும், இதுவரை 40 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 219 நக்சல்கள் கொல்லப்பட்டனர்; 800க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
அதேபோல், நக்சல்கள் தாக்குதலில் கடந்த ஆண்டு 18 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்; பொதுமக்கள் 65 பேர் உயிரிழந்தனர்.
நக்சல்களை வேரோடு அழிக்கும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த பயணத்தில், நம் வீரர்கள் அடுத்த வெற்றியை பெற்றுள்ளனர். நம் வீரர்களின் துணிச்சலான வெற்றிக்கு பாராட்டுகள்.
விஷ்ணு தியோ சாய்
சத்தீஸ்கர் முதல்வர், பா.ஜ.,
நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் நம் பாதுகாப்புப் படையினர் பெரும் வெற்றியை பெற்று வருகின்றனர். மத்திய - மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையால், மேலும் 16 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய அடி.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,