தேவிகுளம் தொகுதி தேர்தல் வழக்கு ஜன.24ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
தேவிகுளம் தொகுதி தேர்தல் வழக்கு ஜன.24ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
ADDED : ஜன 19, 2024 11:43 PM
மூணாறு:கேரளமாநிலம் தேவிகுளம் தொகுதி சட்டசபை தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ராஜா வெற்றி பெற்றது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜன.24ல் விசாரிக்கப்பட உள்ளது.
தேவிகுளம் தனி தொகுதியில் கிறிஸ்தவரான ராஜா, போலி ஆவணங்கள் மூலம் ஆதிதிராவிடர் என கூறி 2021ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றதாகக்கூறி அதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற குமார் கேரள உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராஜா வெற்றி பெற்றது செல்லாது என உயர் நீதிமன்ற நீதிபதி சோமராஜன் மார்ச் 20ல் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவுக்கு எதிராக ராஜா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கில் எவ்வித சலுகைகளும் இன்றி ராஜா எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் இறுதியில் உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த ஒன்பது மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வழக்கு நீடித்து வருவதாகவும், சாதகமான உத்தரவால் எதிர் தரப்பினர் வழக்கில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் அதனால் வழக்கை விரைந்து முடிக்குமாறு மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்தபோதும் விசாரிக்காமல் இறுதி விசாரணைக்காக ஜன.24க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதனையடுத்து குமார் தரப்பு வழக்கறிஞர் வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.
அதனைக் கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய்குமார் கொண்ட அமர்வு ஜன.24ல் வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தது.