சிறப்பு பூஜைகளுக்கு பெறப்பட்ட மனுக்களில் 36 மட்டுமே நிராகரித்ததாக தமிழக அரசு பதில்
சிறப்பு பூஜைகளுக்கு பெறப்பட்ட மனுக்களில் 36 மட்டுமே நிராகரித்ததாக தமிழக அரசு பதில்
ADDED : ஜன 29, 2024 11:22 PM

புதுடில்லி: உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 22ம் தேதி நடந்தது. நாடு முழுதும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில், சிறப்பு பூஜைகள், கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாய்மொழி தடை பிறப்பிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அனுமதி இல்லை
இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த வினோஜ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த, 22ம் தேதி காலையில் இந்த வழக்கை, நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது.
அப்போது, நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அங்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தரப்படவில்லை என்று கூறப்படுவது அராஜகமான போக்கு. அப்படி பார்த்தால், நாட்டில் எந்த இடத்திலும், எந்த மதத்தினராலும் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது' என, அமர்வு கூறியிருந்தது.
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் எத்தனை விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பதை காரணத்துடன் தெரிவிக்கும்படி, அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
நிலுவை
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
தமிழகம் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு, 288 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 252 மனுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், சட்டம் - -ஒழுங்கு பிரச்னை, உள்ளூர் நிலவரம் காரணமாக, 36 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் மனுவை தாக்கல் செய்ய அனுமதி கேட்டார். ஆனால், அதை அமர்வு ஏற்கவில்லை.
'அது ஒரு நாள் நிகழ்ச்சி. இந்த விவகாரத்தில் நாங்கள் தகுந்த உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளோம்' என, அமர்வு கூறியுள்ளது.