ADDED : டிச 30, 2024 05:36 AM
மும்பை: மஹாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள கங்காகெட் நாகா பகுதியை சேர்ந்தவர் குண்டலிக் உத்தம் காலே, 32. இவரது மனைவி மைனா குண்டலிக். இந்த தம்பதிக்கு 4 மற்றும் 6 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.
ஆண் குழந்தை இல்லாததால், மனைவி மைனாவை காலே தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் மைனா மீண்டும் கர்ப்பமானார்.
இதில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கடந்த 26ம் தேதி இரவு தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மூன்றாவதும் பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி, மனைவியுடன் காலே சண்டையிட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த பெட்ரோலை மைனா மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். மைனா, தீப்பற்றி எரிந்தபடி வலி தாங்காமல் தெருவில் அலறித்துடித்தபடி ஓடினார்.
அப்பகுதியினர் விரைந்து தீயை அணைத்து மைனாவை காப்பாற்றினர். எனினும் பலத்த தீக்காயம் அடைந்த மைனா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக மைனாவின் சகோதரி அளித்த புகாரின்படி போலீசார், குண்டலிக் உத்தம் காலேவை கைது செய்தனர்.

