ADDED : மார் 13, 2024 01:52 AM

பொக்ரான், ராஜஸ்தானின் பொக்ரானில் நேற்று, 'பாரத் சக்தி' என்ற பெயரில் முப்படைகளின் கூட்டுப் பயிற்சி நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ், பல்வேறு விதமான ஆயுதங்களை தாங்கிச் செல்லும் போர் விமானங்களின் சாகசங்கள் வானில் நிகழ்த்தப்பட்டன.
இதேபோல் போர்க்களங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய தளவாடப் பொருட்களான அர்ஜுன் டாங்கிகள், கே9 வஜ்ரா பீரங்கி, தனுஷ், சாரங் போன்ற எதிரி படைகளை குறிவைத்து தாக்கக்கூடிய பீரங்கிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இது தவிர, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்களின் சாகசங்களும் அங்கு கூடியிருந்தவர்களை பரவசப்படுத்தின.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பாரத் சக்தி நிகழ்வின் வாயிலாக புதிய இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையும் பொக்ரானில் தான் நிகழ்த்தப்பட்டது. தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதி நவீன ராணுவ தளவாடங்களின் வாயிலாக நம் சக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது, நம் நாட்டின் சுயசார்பு, நம்பிக்கை, பெருமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

