ADDED : ஏப் 26, 2026 04:59 AM

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சென்னை வந்திருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்வு, இப்போது டில்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது கெஜ்ரிவாலுக்கு சில தகவல் சொல்லப்பட்டது; கூறியவர்கள் பஞ்சாப் மாநில உளவுத்துறை போலீசார்.
'ஆம் ஆத்மி கட்சியிலிருந்து, 10 எம்.எல்.ஏ.,க்களும், சில எம்.பி.,க்களும் பா.ஜ., பக்கம் போக தயாராகி வருகின்றனர்' என்று தகவல் தரப்பட்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது; பகவந்த் சிங் மான் முதல்வராக உள்ளார். அடுத்த ஆண்டு, பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
டில்லி வந்து எம்.பி.,க்களையும், எம். எல்.ஏ.,க்களையும் சந்தித்து சமாதானப்படுத்தினார் கெஜ்ரிவால்; ஆனால், ராஜ்யசபாவின் ஏழு எம்.பி.,க்கள், பா.ஜ.,விற்கு தாவிவிட்டனர்.
இதில், முக்கிய பங்கு வகித்தவர் ராகவ் சத்தா. கடந்த 2022 சட்டசபை தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற, இவர் தான் முக்கிய காரணம். எப்படி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என, திட்டம் வகுத்து தந்தவர்.
ஆனால், சமீப காலமாக இவருக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே பிரச்னை. இதனால், இவரை ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தன்னை நீக்கியதால், கோபம் கொண்ட ராகவ் இப்போது கட்சியையே உடைத்து விட்டார்.
'கெஜ்ரிவால், தி.மு.க.,விற்கு பிரசாரம் செய்யப்போன நேரம் சரியில்லை. இதனால்தான், காங்கிரசின் ராகுல், ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவில்லை போலிருக்கிறது' என்று கிண்டலடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.
எது எப்படியோ, பஞ்சாப் சட்டசபை தேர்தல் இன்னும், 10 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு இது பெரும் பின்னடைவுதான்.
