ஆற்றில் அடித்து செல்லப்பட்ட லாரியின் டயர்கள் கண்டுபிடிப்பு
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட லாரியின் டயர்கள் கண்டுபிடிப்பு
ADDED : செப் 21, 2024 11:25 PM

உத்தர கன்னடா: உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரின் சிரூரில், கடந்த ஜூலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். எட்டு பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
கங்காவலி ஆற்றில் மூழ்கிய ஜெகந்நாத் நாயகா, லோகேஷ் நாயகா, கேரள லாரி ஓட்டுனர் அர்ஜுன் ஆகியோரின் சடலங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அன்று முதல் மூவரின் சடலங்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஜூலை 28ம் தேதி முதல் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் மீண்டும் தேடும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ட்ரோன், நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர்.
இம்முறை கோவாவில் இருந்து துார்வாரும் கப்பல் கொண்டு வரப்பட்டது. நேற்று துார்வாரும்போது, 15 அடி ஆழத்தில், டேங்கர் லாரியின் ஓட்டுனர் இருக்கையில் இருந்த மரப்பலகை, லாரியின் டயர்கள் கிடைத்தன. தொடர்ந்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
கங்காவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள துார்வாரும் படகு.