ஆந்திராவில் ரூ.8 கோடியை பதுக்கி எடுத்துவந்த லாரி; பணம் பறிமுதல்; 2 பேர் கைது
ஆந்திராவில் ரூ.8 கோடியை பதுக்கி எடுத்துவந்த லாரி; பணம் பறிமுதல்; 2 பேர் கைது
ADDED : மே 09, 2024 11:11 AM

அமராவதி: ஆந்திராவில் பைப் ஏற்றி வந்த லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி அதில், ரூ.8 கோடி பணத்தை பதுக்கி எடுத்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் மூன்று கட்டங்கள் நேற்று முன்தினத்துடன் (மே 7) முடிவடைந்தன. அடுத்தக்கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் நடக்க இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, பறக்கும் படையினரும், போலீசாரும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிக்காபாடு சோதனைச்சாவடியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பைப்களை ஏற்றிவந்த லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி அதில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட ரூ.8 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினருக்கு போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு, பணத்தை லாரியில் எடுத்துவந்த 2 பேரை கைது செய்தனர். இந்த பணம் ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.