அமைச்சர் சொந்த ஊரில் தீண்டாமை தலித் மக்களுக்கு தொடரும் கொடுமை
அமைச்சர் சொந்த ஊரில் தீண்டாமை தலித் மக்களுக்கு தொடரும் கொடுமை
ADDED : பிப் 16, 2024 07:19 AM
கொப்பால்: கன்னடம் மற்றும் கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகியின் சொந்த ஊரான கொப்பாலில், தலித் சமூக மக்கள் தீண்டாமையை எதிர்கொள்ளும் கொடுமை தொடர்கிறது.
நம் நாடு சுதந்திரம் அடைந்தது 76 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் தீண்டாமை உயிர்பிப்புடன் இருக்கிறது. ஜாதி பாகுபாடு பார்க்கும் அவலம், சமூகத்தில் நிலவி வருகிறது.
வட மாவட்டங்களில், தீண்டாமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.
இந்நிலையில், கன்னடம் மற்றும் கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகியின் சொந்த ஊரில், தலித் மக்கள் தீண்டாமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
நாளிதழில் உணவு
கொப்பால் அருகே உள்ளது ஹலவர்த்தி கிராமம். இந்த கிராமத்தில் 4,000 பேர் வசிக்கின்றனர். இதில் 80 குடும்பத்தினர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மூன்று வயது மகளுக்கு முடிதிருத்தம் செய்ய, சலுானுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தலித் என்பதால் அந்த சிறுமிக்கு, முடிதிருத்தம் செய்ய, சலுான் உரிமையாளர் மறுத்துள்ளார்.
இன்னொரு தலித் வாலிபர் ஹோட்டலுக்கு, உணவு சாப்பிட சென்றபோது, இலையில் வைத்து சாப்பாடு கொடுப்பதற்கு பதிலாக, நாளிதழில் வைத்து ஹோட்டல் உரிமையாளர், உணவு கொடுத்து உள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார்களின்பேரில், சலுான் கடைக்காரர், ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 'தலித் என்பதால், எங்களை கோவிலுக்குள் அனுமதிப்பது இல்லை. உயர் ஜாதியினர் தொடர்ந்து அவமதிக்கின்றனர்' என கூறி, தலித் சமூக வாலிபர்கள் நேற்று காலை போராட்டம் நடத்தினர்.
பேச்சு
அந்த கிராமத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள், இருதரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தினர். 'தலித் மக்களை அவமதித்தால், தண்டனையை அனுபவிக்க நேரிடும்' என, உயர் ஜாதியினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கொப்பால் மாவட்டம், கனககிரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவராஜ் தங்கடகி. கன்னடம் மற்றும் கலாசார அமைச்சராகவும், கொப்பால் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். சிவராஜ் தங்கடகியும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.