சித்தராமையா மனைவி வாங்கிய 14 மனைகளின் மதிப்பு ரூ.56 கோடி!
சித்தராமையா மனைவி வாங்கிய 14 மனைகளின் மதிப்பு ரூ.56 கோடி!
UPDATED : ஜன 31, 2025 09:22 AM
ADDED : ஜன 31, 2025 12:26 AM

பெங்களூரு: கர்நாடகாவில், 'முடா' கையகப்படுத்திய, 3.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கு மாற்றாக, 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 வீட்டு மனைகளை சித்தராமையா மனைவி வாங்கியதாக, அமலாக்கதுறை விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், தன் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால், 14 வீட்டுமனைகளையும், முடாவிடம் முதல்வரின் மனைவி திருப்பிக் கொடுத்தார்.
பறிமுதல்
இதற்கிடையில், முடாவில் இருந்து பலருக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
முடா முன்னாள் கமிஷனர் நடேஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.
முடாவில் இருந்து சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாகக் கூறி, 200க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை, அமலாக்கத்துறை தற்காலிகமாக பறிமுதல் செய்து, முடக்கி உள்ளது.
இது தொடர்பாக, அமலாக்கத்துறையின் பறிமுதல் உத்தரவு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வரின் மனைவி பார்வதியிடம் இருந்து முடா கையகப்படுத்திய, 3.16 ஏக்கர் நிலத்துக்குரிய மதிப்பு 3 லட்சத்து 24 ஆயிரத்து 700 ரூபாய் தான். ஆனால், கையகப்படுத்திய நிலத்திற்கு பதிலாக மாற்று மனைகள் வாங்கிய போது, முடாவிடம் தவறான தகவல் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2013 முதல் 2018 வரை சித்தராமையா முதல்வராக இருந்தார். தன்னிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மாற்று மனைகள் வழங்க வேண்டும் என்று, 2014 ஜூலை 14ல், முடாவுக்கு பார்வதி கடிதம் எழுதி உள்ளார்.
இதை ஏற்று, அவருக்கு 2021ல் வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அப்போது, பா.ஜ., ஆட்சி நடந்தது. சித்தராமையா எதிர்க்கட்சித் தலைவராகவும், அவரது மகன் யதீந்திரா எம்.எல்.ஏ., மற்றும் முடா உறுப்பினராகவும் இருந்தார்.
பார்வதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலத்திற்கு மாற்றாக, நியாயமாக தேவனுாரில் மனைகள் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், சித்தராமையாவின் ஆதரவாளர் சி.டி.குமார் என்பவர், பார்வதி சார்பில் முடா அலுவலகத்திற்கு சென்று, முடா முன்னாள் கமிஷனர் நடேஷை சந்தித்து, தங்களுக்கு எந்தெந்த வீட்டுமனை வேண்டும் என்று தேர்வு செய்துள்ளார்.
352 வீட்டுமனைகள்
நடேஷ் வீட்டில் நாங்கள் நடத்திய சோதனையின் போது, சி.டி.குமார் உடனான நடேஷின் உரையாடல் குறித்த ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தது. தேவனுாரில் 352 வீட்டுமனைகள் இருந்த போதிலும், அரசியல் அழுத்தம் காரணமாக முதல்வர் மனைவிக்கு, மைசூரின் முக்கிய பகுதியான விஜய நகரில் வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முடா முறைகேடு குறித்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கிய பின், பார்வதி 14 வீட்டுமனைகளை முடாவிடம் திருப்பிக் கொடுத்தார்.
ஆனாலும், இதில் சட்ட விரோத பணப்பரிமாற்ற முயற்சி நடந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முடா தங்களிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்திற்கு, சட்டத்திற்கு உட்பட்டே 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதாகவும், விஜயநகரில் வீட்டுமனை வேண்டும் என்று கேட்கவில்லை என்றும் சித்தராமையா கூறி இருந்தார்.
ஆனால், அவரது ஆதரவாளர் வாயிலாக, விஜயநகரில் வீட்டுமனை பெற்று இருப்பது தெரியவந்து உள்ளது.
வாக்குமூலம் செல்லாது
மேலும், 14 வீட்டுமனை வாங்கிய பிரச்னை விஸ்வரூபம் எடுத்த போது, '14 வீட்டுமனைகளின் மதிப்பு 56 கோடி ரூபாய். அந்த பணத்தை எங்களுக்கு யார் தருவது' என்றும் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கிடையில், முடா முன்னாள் கமிஷனர் நடேஷ் வீட்டில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதமானது என்றும், நடேஷிடம் பெற்ற வாக்குமூலம் செல்லாது எனவும் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் கூறி இருந்தது.
இது, சித்தராமையாவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.