ADDED : டிச 13, 2024 03:01 AM

புதுடில்லி :கடந்த, 90 ஆண்டுகளாக இருந்த விமானங்கள் சட்டத்துக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'வாயுயான் விதேயக்' மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இது சட்டமானது.
விமானங்கள் தயாரிப்பு தொடர்பாக, 1931ல் அமல்படுத்தப்பட்டது விமானங்கள் சட்டம். இந்த சட்டம், 21 முறை திருத்தப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப இந்தச் சட்டத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, வாயுயான் விதேயக் மசோதா லோக்சபாவில் கடந்த அக்டோபரில் நிறைவேறியது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில், கடந்த வாரம் இந்த மசோதா ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறியது.
இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
விமானங்கள் வடிவமைப்பு, தயாரிப்பு, பராமரிப்பு, அதை சொந்தமாக வைத்திருப்பது, பயன்படுத்துவது, இயக்குவது, விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பைலட்டுகளுக்கு பயிற்சி அளிப்பது, பயணியரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதுடன், சர்வதேச விதிகளை கடைப்பிடிக்கும் நோக்கத்தோடு, இந்தச் சட்டத்தில் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. விமானத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான பிரிவுகளும் ஈடுபட்டுள்ளன.
ராஜ்யசபாவில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது, சட்டத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு, திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.