ADDED : ஜன 05, 2025 10:57 PM
சாம்ராஜ்நகர்: தலித் சமுதாயத்தினருக்கு, வீடு கொடுத்ததால் மேல் வர்க்கத்தினர், வீட்டு உரிமையாளர் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்ராஜ்நகர், எளந்துாரின் அகரா கிராமத்தின், லிங்காயத் சமுதாய லே --- அவுட்டில் வசிப்பவர் வீரண்ணா. 68. இவரது மனைவி கவுரம்மா, 64. வீரண்ணாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை அவர், தலித் சமுதாய தலைவரின் குடும்பத்தினருக்கு வாடகைக்கு கொடுத்தார்.
இதனால், கிராமத்தின் உயர் சமுதாயத்தினர் கோபமடைந்தனர். தலித்துக்கு வாடகைக்கு வீடு கொடுக்க கூடாது. காலி செய்யும்படி தம்பதிக்கு நெருக்கடி கொடுத்தனர். வீரண்ணா, கவுரம்மா தம்பதி சம்மதிக்காததால், அவர்களை கிராமத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
மனம் வருந்திய தம்பதி, இது தொடர்பாக எளந்துார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தம்பதிக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

