முஸ்லிம் மாநிலமான ஜம்மு - காஷ்மீரில் வக்ப் சட்ட மசோதாவை ஏற்க முடியாது: தேசிய மாநாட்டு கட்சி
முஸ்லிம் மாநிலமான ஜம்மு - காஷ்மீரில் வக்ப் சட்ட மசோதாவை ஏற்க முடியாது: தேசிய மாநாட்டு கட்சி
ADDED : ஏப் 08, 2025 02:31 AM

ஜம்மு : 'வக்ப் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும்' என, ஆளும் தேசிய மாநாட்டு கட்சியினர், ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். 'முஸ்லிம் பெரும்பான்மை உள்ள மாநிலத்தில் இந்த மசோதாவை ஏற்க முடியாது' என, அவர்கள் கோஷமிட்டனர்.
வக்ப் சொத்துக்கள் நிர்வாகம் தொடர்பாக, வக்ப் சட்டத்திருத்த மசோதா, பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேறியது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இது சட்டமானது.
அனுமதி மறுப்பு
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியினர், வக்ப் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.
இதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் அப்துல் ரஹீம் ரத்தேர் அனுமதி மறுத்தார். ''ஏற்கனவே சட்டமாகியுள்ள நிலையில், அது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க முடியாது,'' என, அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஆளும் தேசிய மாநாட்டு கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபையின் மையப் பகுதிக்குச் சென்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர். இதனால், சபையில் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ., தன்வீர் சாதிக், ''இந்த மசோதாவை எங்கள் கட்சி எதிர்க்கிறது. இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும். ஜம்மு - காஷ்மீர் முஸ்லிம் மாநிலம். வக்பு மசோதாவை நிராகரிக்க வேண்டும்,'' என, கோஷமிட்டார்.
எதிர்ப்பு
'ஏற்கனவே சட்டமாகி யுள்ள நிலையில், மசோதா குறித்து விவாதிப்பதில் என்ன பலன்?' என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தேசிய மாநாட்டு கட்சியினர், சட்டசபையில் கருப்புக் கொடியைக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீர் தற்போது யூனியன் பிரதேசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

