யமுனையில் வடிகிறது வௌ்ளம் நீர்மட்டம் 206.47 மீட்டராக குறைந்தது
யமுனையில் வடிகிறது வௌ்ளம் நீர்மட்டம் 206.47 மீட்டராக குறைந்தது
ADDED : செப் 06, 2025 10:13 PM

புதுடில்லி:யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு அபாய அளவைத் தாண்டி பாய்ந்தாலும் நீர்மட்டம், 206.47 மீட்டராகக் குறைந்தது. இது மேலும் குறைந்து விரைவில் அபாய அளவுக்கு கீழ் செல்லும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பெய்த கனமழையால், யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
டில்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவான 206 மீட்டரையும் கடந்து 207 மீட்டரையும் தாண்டியது.
இதனால், கரையோரப் பகுதிகளில் வீடு, கடைகள் மற்றும் வயலுக்குள் வெள்ளம் புகுந்தது.
வெள்ளத்தில் வீடுகள் மூழ்கிய நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு டில்லி - -மீரட் விரைவுச் சாலை, மயூர் விஹார், காஷ்மீரி கேட் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், யமுனை நதியில் நீர்மட்டம் நேற்று 206.47 மீட்டராக குறைந்தது. இது, படிப்படியாக குறைந்து அபாய அளவுக்கு கீழ் விரைவில் சரியும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர். இதனால், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள யமுனை கரையோரவாசிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் நாளை எண்ணி காத்திருக்கின்றனர்.
நேற்று காலை 9:00 மணிக்கு ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 50,629 கனஅடியும், வஜிராபாத் தடுப்பணையில் இருந்து, ஒரு லட்சத்து 17,260 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
கட்டடம் இடிந்தது தென்கிழக்கு டில்லி பதர்பூர் இந்திரா நர்சரி அருகே, நான்கு மாடிகள் கொண்ட பழைய கட்டடம் நேற்று மதியம் 1:00 மணிக்கு இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் இடி பாடுகளை அகற்றினர்.