ADDED : செப் 22, 2024 11:19 PM

சாந்தி நகர்: சாந்தி நகரில் ஏற்கனவே இரண்டு முறை போடப்பட்ட சாலையை, 'ஒயிட் டாப்பிங்' பணிக்காக மூன்றாவது முறையாக தோண்டி உள்ளதால், அப்பகுதி மக்கள், பெங்களூரு மாநகராட்சி மீது அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு நகரில் சாலைகளில் உள்ள பள்ளங்களை மூட, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகளும், இரவு, பகலாக பள்ளங்களை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சாந்தி நகர் ஸ்வஸ்திக் சாலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்குள், இரண்டு முறை புதிய சாலை போடப்பட்டு உள்ளது.
ஒருமுறை சாலை போடப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை நிலைத்திருக்க வேண்டும்.
ஆனால், இச்சாலையில் கடந்த ௪ ஆண்டுகளில், ௨ முறை, தோண்டி, சிமென்ட் சாலை அமைத்து உள்ளனர். இதனால் இச்சாலையில் வசிப்போர் பெரும் சிரமப்பட்டனர். தற்போது, ஒயிட் டாப்பிங் பணி என்று கூறி, மூன்றாவது முறையாக இச்சாலையை தோண்டி உள்ளனர்.
வழக்கம் போல் சாலை அமைத்த சில மாதங்களில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்படும். அதை சரியாக மூடாமல், பள்ளங்களாக காட்சி அளிக்கும். மீண்டும் புதிதாக சாலை அமைப்பர்.
இது தான் வாடிக்கையாகி விட்டது. பொது மக்களின் வரிப்பணத்தை மாநகராட்சி அதிகாரிகள் வீணாக்குகின்றனர் என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.