ADDED : ஜூலை 20, 2024 12:28 AM

பிராங்க்பர்ட் : 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின், 'விண்டோஸ் - 10,11' இயங்குதளங்கள் நேற்று முடங்கியதால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் விமான புறப்பாடு, வங்கி பரிவர்த்தனைகள், மருத்துவ சிகிச்சைகள், செய்தி ஒளிபரப்புகள் பல மணி நேரம் முற்றிலுமாக முடங்கின. 'இது, 'சைபர்' தாக்குதல் அல்ல; மென்பொருள், 'அப்டேட்' செய்கையில் ஏற்பட்ட தவறே இந்த கோளாறுக்கு காரணம்' என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தை, உலகம் முழுதும் உள்ள பல்வேறு துறைகளும் பயன்படுத்தி வருகின்றன.
விமான போக்குவரத்தில் துவங்கி, தொலைக்காட்சி ஒளிபரப்பு வரை இந்த இயங்குதளத்தை நம்பியே செயல்பட்டு வருகின்றன.
நேற்று காலையில், விண்டோஸ் இயங்குதளத்தை திறந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் கணினி திரையில், 'ப்ளூ ஸ்க்ரீன் எரர்' என்ற தகவல் ஒளிர்ந்தது.
தவிப்பு
'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, 'ரீஸ்டார்ட்' செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின், 'ரீஸ்டார்ட்' செய்வோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், கணினிகளை தொடர்ந்து இயக்க முடியாமல் பயனர்கள் தவித்தனர். உலகம் முழுதும் உள்ள விமான நிலையங்களில் 'போர்டிங் பாஸ்' மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பணியாளர்கள் தவித்தனர்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் பயணியர் வரிசைகட்டி நின்றனர். நுாற்றுக்கணக்கான விமானங்களுக்கு ஒரே நேரத்தில் கணினி உதவியின்றி பணியாளர்கள் கைகளால் எழுதி 'போர்டிங் பாஸ்' வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலகம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து, 90 சதவீத விமானங்கள் இயக்கப்படவில்லை.
மருத்துவமனைகளில் டாக்டர்கள் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்றைய தினம் திட்டமிடப்பட்டு இருந்த அறுவை சிசிச்சைகள் தாமதமாக நடந்தன.
வங்கிகளில் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. பங்கு சந்தை வர்த்தகம் பல நாடுகளில் முடங்கின. ஏபிசி, ஸ்கை நியூஸ் உள்ளிட்ட காட்சி ஊடகங்களின் ஒளிபரப்பு பல மணிநேரம் தடைபட்டது.
குளறுபடி
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், 'மைக்ரோசாப்ட் அல்லது விண்டோஸ் இயங்குதளத்தில் பிரச்னை இல்லை. 'கிரவுட்ஸ்ட்ரைக்' அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களே குளறுபடிக்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனர் ஜார்ஜ் கர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 'இது சைபர் தாக்குதல் கிடையாது. இந்த பிரச்னையை சரிசெய்ய முயற்சித்து வருகிறோம்.
'வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பயனர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'மைக்ரோசாப்ட் சிக்கல் தொடர்பாக அந்நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு, விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
'எனினும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.
பங்கு சந்தையிலும்...
மைக்ரோசாப்ட் 'விண்டோஸ் 10' மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னையால், நேற்று விமான சேவைகள், தகவல்தொழில்நுட்ப சேவைகள் பெருமளவில் பாதிப்பை சந்தித்தன. இந்திய பங்கு சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது.
பெரியளவில் பாதிப்பு இல்லை எனினும், நேற்று பிற்பகல் வர்த்தக நேரத்தின் போது, 'ஏஞ்சல் ஒன், 5 பைசா, ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டிஸ், மோதிலால் ஆஸ்வால்' உட்பட பல தரகு நிறுவனங்களின் செயலிகள், சிறிது நேரம் சரிவர இயங்கவில்லை.
இதனால் முதலீட்டாளர்கள் செய்வதறியாமல் திகைத்து போயினர். வங்கிகளை பொறுத்தவரை, 10 வங்கிகளின் சேவை பாதிக்கப்பட்டதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.