சுரேஷின் தங்கை பெயரில் மோசடி செய்த பெண் தோண்ட தோண்ட அம்பலமாகும் தில்லாலங்கடி
சுரேஷின் தங்கை பெயரில் மோசடி செய்த பெண் தோண்ட தோண்ட அம்பலமாகும் தில்லாலங்கடி
ADDED : டிச 29, 2024 11:07 PM

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, 8 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி மோசடி செய்த வழக்கில், கைதான பெண் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மாண்டியாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசித்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, சந்திரா லே - அவுட்டில் உள்ள வராஹி என்ற நகைக்கடையில் இருந்து, 8 கோடி ரூபாய் மதிப்பிலான 14 கிலோ 600 கிராம் எடையுள்ள, தங்க நகைகளை வாங்கினார். பணம் கொடுக்காமல் மோசடி செய்தார்.
கன்னட நடிகர் தர்மேந்திராவை, சுரேஷ் குரலில் பேச வைத்து, நகைக்கடை உரிமையாளர் வனிதா ஐதாலை ஏமாற்றினார்.
இதுகுறித்த புகாரில் ஐஸ்வர்யா, அவரது கணவர் ஹரிஷ், நடிகர் தர்மேந்திரா மீது வழக்கு பதிவானது. நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரான ஐஸ்வர்யா, ஹரிஷ் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஐஸ்வர்யா மீது மேலும் ஒரு மோசடி குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
ரூ.5.50 கோடி
ஜே.பி.நகரில் நகைக்கடை நடத்தும் சோனு லமானி என்பவர் நேற்று கூறியதாவது:
நானும், ஐஸ்வர்யாவும் முதன் முதலில் சந்தித்த போது, தொழில் முனைவோர் என்று என்னிடம் கூறினார். பின், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்றார். அமைச்சர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை என்னிடம் காண்பித்தார். இதனால் அவரை நம்பினேன்.
சொந்தமாக நிலம் பேசி முடிக்க, அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, கடந்த ஆண்டு என்னிடம் இருந்து 5.50 கோடி ரூபாய் வாங்கினார். இன்னும் தரவில்லை. காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் பேசுவது போன்று, யாரையோ என்னிடம் பேச வைத்தார்.
ஐஸ்வர்யாவின் சொந்த ஊர் மாண்டியா. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, என்னை அங்கு அழைத்து சென்றார். எம்.எல்.ஏ., ஒருவரை வைத்து, என்னை மிரட்டினார்.
'எப்போது பணம் இருக்கிறதோ, அப்போது ஐஸ்வர்யா கொடுப்பார். அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது. போலீசுக்கும் செல்ல கூடாது' என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
என்னை மட்டும் அவர் ஏமாற்றவில்லை. வனிதாவையும் ஏமாற்றினார் என்பது இப்போது தெரிந்தது. ஐஸ்வர்யா மீது போலீசில் புகார் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பலாத்கார புகார்
ஐஸ்வர்யாவுக்கு, ஆர்.ஆர்.நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரேயாஷ் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். அவரிடமும் தன்னை, சுரேஷின் தங்கை என்று கூறி உள்ளார்.
ஆர்.ஆர்.நகரில் சாலை பணி ஒப்பந்தம் வாங்கி கொடுக்கிறேன்; மூன்று கோடி ரூபாய் தர வேண்டும் என்று 'டீல்' பேசி உள்ளார். சுரேஷ் குரலில் யாரோ ஒருவர் ஸ்ரேயாஷிடமும் பேசி உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் அவர் மோசடியில் இருந்து தப்பித்தார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா மீது ஏற்கனவே, ஒரு மோசடி வழக்கு பதிவாகி இருந்தது, தற்போது தெரியவந்து உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு விஜயநகரில் உள்ள முக அறுவை சிகிச்சை மையத்திற்கு அவர் சென்று உள்ளார். அந்த மையத்தை நடத்தும், டாக்டருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். 'செகண்ட் ஹேண்ட்' கார்களை வாங்கி விற்பதாக கூறி உள்ளார்.
விலை உயர்ந்த காரை, குறைந்த விலையில் வாங்கி தருவதாக, டாக்டரிடம் இருந்து 6 கோடி ரூபாய் வாங்கி உள்ளார். ஆனால் கார் வாங்கி தரவில்லை. பணமும் கொடுக்கவில்லை.
இந்த ஆண்டு ஜனவரியில் விஜயநகரில் ஐஸ்வர்யாவை, டாக்டர் சந்தித்து பணத்தை கேட்டு உள்ளார். பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், உன் மீது பொய் பலாத்கார புகார் அளிப்பேன் என்றும், டாக்டரை மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து டாக்டர் அளித்த புகாரில், விஜயநகர் போலீசார், ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் தன்னிடம் விசாரணை நடத்த, நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா தடை வாங்கி உள்ளார். இதனால் அந்த வழக்கு அப்படியே கிடப்பில் கிடக்கிறது.