‘உன்னால் ‘முடியாது’ வார்த்தைகள் தான் ஜெயிக்க வைத்தது!’
‘உன்னால் ‘முடியாது’ வார்த்தைகள் தான் ஜெயிக்க வைத்தது!’
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 11:34 AM

சென்னை கவுரிவாக்கத்தில், ‘டானெல்லா’ என்ற பெயரில் ஆடை வடிவமைக்கும் கடையை நடத்தி வரும், 33 வயதாகும் பெண் ஷரோன்:
என் சொந்த ஊர் துாத்துக்குடி; படித்ததெல்லாம் சென்னை தான். இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே திருமணமானது. ‘அவ்வளவு தான் படிப்பு’ என வேதனைப்பட்ட போது, ‘நீ படி; உனக்காக நான் இருக்கிறேன்’ என்று கணவர் கூறியதுடன், துாத்துக்குடியில் அவர் பார்த்த வேலையை விட்டு விட்டு, என்னுடன் சென்னை வந்தார்.
அவருடைய ஆதரவால் படிப்பை வெற்றிகரமாக முடித்தேன். பின், ‘டெய்லரிங்’ வகுப்பில் கணவர் சேர்த்து விட்டார். எனக்கும் அதில் ஆர்வம் இருந்ததால், வகுப்பில் சொல்லி தருவதை தாண்டி, நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
மேலும், ஆடை வடிவமைப்பாளர்களிடம் சில ஆண்டுகள் வேலை பார்த்து, துணி வாங்குவது முதல், பல்வேறு விதமான அனுபவங்களையும் கற்றதை வைத்து, ‘டெய்லரிங் கடை வைக்கப் போகிறேன்’ என வீட்டில் கூறியபோது, ‘இன்ஜினியரிங் படித்து விட்டு, ஜாக்கெட்டுக்கு பட்டன் தைக்கப் போறியா?’ என்று கேட்டனர்.
அப்போதும் கணவர் முழு ஆதரவு கொடுத்தார். வீட்டுக்கு அருகில், எங்கள் உறவினரின் சிறு கிடங்கில் கடையை ஆரம்பித்தேன். பிளவுஸ், சுடிதார் தைப்பது என வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தாமல், ஆடை வடிவமைப்பில், ‘டிப்ளமா’ முடித்து, மேற்கத்திய ஆடைகள், விதவிதமான கவுன்கள் தைத்து கொடுத்தேன்; ஆயினும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
அதனால், ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ படித்து, சமூக வலைதளங்களில் காணொளிகள் பதிவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல வாடிக்கையாளர்கள், ‘ஆர்டர்’ தர ஆரம்பித்தனர். அப்போது தான், ‘சமூக வலைதளங்கள் வெறும் விளம்பரத்துக்கான இடம் கிடையாது; நம் தொழிலுக்கான நேரடி வாடிக்கையாளர்களை உருவாக்கி தரும் முக்கிய தளம்’ என புரிந்தது.
இத்துறையில் போட்டிகள் அதிகம் என்பதால், தனித்துவமாக செய்ய வேண்டும் என முடிவெடுத்து, வாடிக்கையாளர்களின் விருப்பம், தேவைகளை புரிந்து, அதற்கேற்ற மாதிரி வடிவமைத்து தர ஆரம்பித்தேன்.
இப்போது, ‘போட்டோ, வீடியோ’க்கள் வாயிலாக என் தயாரிப்புகளுக்கு கூடுதல் விளம்பரமும் செய்து வருகிறேன். என்னிடம் 10 பேர் வேலை செய்கின்றனர். 5,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாதம், 4 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
ஒரு பெண் தொழில் ஆரம்பிப்பதே சவால் தான். ‘உன்னால் முடியாது’ என்று சொன்ன வார்த்தைகள், என் நம்பிக்கையை உடைத்தாலும், அதே வார்த்தைகள் தான், எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியையும் கொடுத்தது.
தொடர்புக்கு: 97911 35432.
