ADDED : ஜூன் 02, 2025 11:55 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, மசூதியில் இருந்து ஆறு லட்சம் ரூபாய் திருடிய சம்பவத்தில், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் அருகே உள்ளது சுபாத்துல் இஸ்லாம் ஜமாத்து மசூதி. நேற்று முன்தினம் இந்த மசூதியின் அலுவலக அலமாரியில் வைத்திருந்த, ஆறு லட்சம் ரூபாய் திருட்டு போனது. இது தொடர்பாக மசூதி நிர்வாகத்தினர் ஒற்றைப்பாலம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் அஜீஷ் தலைமையிலான போலீசார், மசூதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்தினர். அதில், பணத்தை திருடியது அப்பகுதியைச் சேர்ந்த அபூபக்கர், 28, என்பது தெரியவந்தது.
மண்ணார்க்காடு பகுதியில் பதுங்கி இருந்த அபூபக்கரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், அவரை சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் அஜீஷ் கூறுகையில், ''தினமும் மசூதிக்கு வரும் அபூபக்கர், அலுவலக அலமாரியில் பணம் இருப்பதை அறிந்து, அலுவலக கதவை உடைத்து பணத்தை திருடியுள்ளார்,'' என்றார்.