வரலாறு, கலாசார பாரம்பரியத்துக்கு பிரசித்தி பெற்ற தெப்பக்குளம்
வரலாறு, கலாசார பாரம்பரியத்துக்கு பிரசித்தி பெற்ற தெப்பக்குளம்
ADDED : பிப் 15, 2024 05:56 AM

செழுமையான வரலாறு, கலாசார பாரம்பரியத்துக்கு பெயர் பெற்ற தாவணகெரேயின் மையப் பகுதியில் அமைந்துள்ளது சந்தேபென்னுார் புஷ்கரணி - தெப்பகுளம். இது, தாவணகெரேயின் மறைக்கப்பட்ட ரத்தினம் என்று சொல்லலாம்.
இந்த புராதன தெப்பக்குளம், 10 முதல் 12ம் நுாற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்ட மேற்கு சாளுக்கியர்களின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
தெப்பகுளத்தின் நடுவில் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, குளத்தை சுற்றிலும் எட்டு கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. இதில், தற்போது ஆறு மட்டுமே அப்படியே உள்ளன.
இந்த தெப்பக்குளம் அப்போயை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. மதம், கலாசார விழகாக்களின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருந்தது. இந்த தெப்பகுளத்தின் கட்டடக்கலை, கடந்த காலத்தின் கைவினைத்திறனுக்கு சான்றாக உள்ளது. படிக்கட்டு கிணறு ஒரு செவ்வக வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தெப்பகுளத்தின் கல் சுவர்களில் புராண காட்சிகள், தெய்வங்கள் உட்பட சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ஆன்மிக முக்கியத்துவம்
இந்த தெப்பகுளம், உள்ளூர் மக்களுக்கு மகத்தான ஆன்மிக முக்கியத்துவத்தை கொண்டு உள்ளது. இது ஒரு புனிதமான தலமாக கருதப்படுகிறது. ஆறுதல், ஆசி பெறுவதற்காக பக்தர்கள் அடிக்கடி இங்கு வருகின்றனர். விழாக்கள், சடங்குகள் இங்கு நடத்தப்படுகின்றன.
சுற்றுலா வரும் பயணியர், படிக்கட்டுகளில் அமர்ந்திருக்க, அவர்களின் குழந்தைகள் படிக்கட்டுகளில் விளையாடி மகிழ்கின்றனர். இந்த தெப்பகுளம் பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைக்கும்சக்தியாக செயல்படுகிறது.
இந்த தெப்பகுளம், அதன் வசீகரத்தை காண, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளிக்கு விமானம் மூலம் செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ் அல்லது டாக்சியில் செல்லலாம். பெங்களூரில் இருந்த தாவணகெரே ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, பஸ், டாக்சியில் செல்லலாம்.
பெங்களூரு உட்பட தாவணகெரே அருகிலுள்ள நகரில் இருந்தும் சந்தேபென்னுார் தெப்பகுளம் இருக்கும் இடத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- நமது நிருபர் -

