இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க சதி ! மக்கள் சுதாரிக்க ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை
இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க சதி ! மக்கள் சுதாரிக்க ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை
UPDATED : அக் 13, 2024 09:27 AM
ADDED : அக் 12, 2024 11:55 PM

நாக்பூர்:“நம் நாடு பொருளாதார ரீதியில், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சர்வதேச அளவில் தனி மரியாதையும் பெற்று வருகிறது. ஆனால், இதை கெடுப்பதற்கு பல முனைகளில் இருந்தும் சதிகள் நடக்கின்றன. இந்த விஷயத்தில் மக்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்,” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறினார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், விஜயதசமியையொட்டி ஆண்டுதோறும் நடக்கும் பேரணி நடந்தது.
அதை துவக்கி வைத்து, மோகன் பகவத் பேசியதாவது:
சூழ்நிலை நமக்கு சாதகமாக இல்லாத போதும், தனிப்பட்ட மற்றும் நாட்டின் மீதான நம்பிக்கையில் ஒவ்வொருவரும் உறுதியுடன் இருந்தால் வெற்றியைத் தடுக்க முடியாது.
கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியா வலுவானதாகவும், மரியாதைக்கு உரியதாகவும் உயர்ந்துள்ளதை ஒவ்வொருவரும் உணர்கின்றனர். மக்களின் ஒட்டுமொத்த குணங்களே நாட்டை வலுவாக்கும்.
ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள், அரசு மற்றும் நிர்வாகத்தினால், உலக அளவில் நம் நாடு குறித்த கண்ணோட்டம், பெருமை உயர்ந்து வருகிறது. ஆனால், இதை சீர்குலைக்க சிலர் சதி செய்கின்றனர்.
ஒரு நிலைக்கு மேல் இந்தியா முன்னேறுவதை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. நாட்டை பலவீனப்படுத்த, குழப்பங்கள் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
தங்களை ஜனநாயகவாதிகளாக, உலக அமைதிக்காக போராடுவதாகக் கூறும் இவர்கள், சிலரது பின்புலத்தில் நம் நாட்டுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
வங்கதேசத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட போது, இந்தியாவை எதிரியாக சித்தரிக்கும் முயற்சி நடந்தது.
முஸ்லிம்களுக்கு எதிரான நாடு இந்தியா என்று, ஒரு போலி பிம்பத்தை உருவாக்கியது யார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
தங்களுடைய சுய தேவைகளுக்காக, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பெருமைக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர்.
அரசியல் போட்டியில், நாட்டின் நலனை இரண்டாம் நிலையிலேயே வைத்திருக்கின்றனர்.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது, மத ரீதியில் பிரச்னை ஏற்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் நடந்த பாலியல் பலாத்கார கொலையில் குற்றவாளியைக் காப்பாற்றுகின்றனர். இதுவே இவர்களின் அரசியல்.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.