அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால் மஹாயுதி கூட்டணியில் சலசலப்பு
அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால் மஹாயுதி கூட்டணியில் சலசலப்பு
ADDED : டிச 16, 2024 11:44 PM

மும்பை: மஹாராஷ்டிராவில், 'மஹாயுதி' கூட்டணி அரசில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதை அடுத்து, சிவசேனா எம்.எல்.ஏ., நரேந்திர போண்டேகர், கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்றது.
இதையடுத்து, பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், மாநில அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவுபடுத்தப்பட்டது. மஹாயுதி கூட்டணியில் இருந்து 39 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இதில், 16 புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது; முன்னாள் அமைச்சர்கள் 10 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,வில் 19 பேர், சிவசேனாவில் 11 பேர், தேசியவாத காங்.,கில் ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
சிவசேனாவில் இருந்து அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் கிழக்கு விதர்பா மாவட்ட தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான நரேந்திர போண்டேகர், கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே விலகிய போது, சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருந்த நான் அவருக்கு ஆதரவு அளித்தேன். இந்த முறை எனக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக அவர் உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து சிவசேனாவில் இணைந்தேன். ஆனால், கடைசி நேரத்தில் அமைச்சரவை பட்டியலில் என் பெயர் இல்லை என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தேன்.
இனி, கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாக தொடர முடிவு செய்துஉள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.