அரசு திட்டங்களுக்கு முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை!: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
அரசு திட்டங்களுக்கு முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை!: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
UPDATED : ஆக 07, 2025 11:48 AM
ADDED : ஆக 07, 2025 01:01 AM

‛உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்த அ.தி.மு.க., - எம்.பி., சி.வி.சண்முகத்திற்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
தமிழகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த வாரம் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
அரசு விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.
ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்கள் படங்களையோ, முன்னாள் முதல்வர்களின் படங்களையோ பயன்படுத்துவது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.
எனவே, அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மேலும், ஆளுங்கட்சியின் பெயர், சின்னம் போன்றவற்றை பயன்படுத்துவதையும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை செய்திருக்கிறது.
மேல் முறையீடு எனவே, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வர்கள் படங்களையோ பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
தி.மு.க., சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் இடம் பெற்ற அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முன் வைத்த வாதம்:
'உங்களுடன் ஸ்டாலின்' புது திட்டமல்ல. பல்வேறு திட்டங்களை ஒன்று சேர்த்து, மக்கள் பயன் பெறும் வகையில் முகாம்கள் அமைத்து செயல்படுத்தும் திட்டம்.
நாடு முழுதும் பல்வேறு மாநில அரசுகள் சார்பில் கொண்டு வரப்படும் திட்டங்களில், அரசியல் தலைவர்களின் பெயர்கள், படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அதற்கு சட்டரீதியாக இதுவரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், ''அரசு திட்டங்களில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என, உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த தீர்ப்பையும் வழங்கவில்லை.
''அரசு திட்டங்களை பிரபலப்படுத்த பிரதமர், முதல்வர் ஆகியோரது பெயர்கள், படங்கள் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கவர்னர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் படங்கள் கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன,'' என, வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், ''எங்களது படங்களை எதற்கு வைக்க வேண்டும்,'' என, சிரித்தபடியே கேட்டார்.
அதற்கு வில்சன், ''பதவியேற்பு விழா, அரசு நிகழ்ச்சிகள், நீதித்துறை சார்ந்த நிகழ்வுகளில் தலைமை நீதிபதிகளின் படங்கள் வைக்கப்படுவது சகஜம்,'' என்று பதிலளித்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க., சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் மணீந்தர் சிங், ''எந்த ஒரு நலத்திட்டத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ள நடைமுறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுகிறோம்.
''அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது என, பொதுநல வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது,'' என்றார்.
ரூ.10 லட்சம் அபராதம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருக்கும் மனுவை உச்ச நீதிமன்ற வழக்காக நாங்கள் மாற்றிக் கொள்கிறோம்.
இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டிருப்பதாக உணர்கிறோம். அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது.
சமீப நாட்களாக, அரசியலுக்காக நீதிமன்றங்களை நாடுவது அதிகரித்து வருகிறது. எனவே, வழக்கை தொடர்ந்த அ.தி.மு.க., - எம்.பி., - சி.வி.சண்முகத்திற்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.
அந்த அபராதத் தொகையை ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசிடம் அவர் ஒப்படைக்க வேண்டும். அந்த தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்காக மட்டுமே தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்