பண மூட்டை நீதிபதிக்கு எதிரான விசாரணையில் பாரபட்சம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் லோக்சபா செயலர் பதில்
பண மூட்டை நீதிபதிக்கு எதிரான விசாரணையில் பாரபட்சம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் லோக்சபா செயலர் பதில்
ADDED : ஜன 08, 2026 03:46 AM

'பண மூட்டை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக விசாரணைக் குழு அமைத்ததில் பாரபட்சம் எதுவும் இல்லை' என, உச்ச நீதிமன்றத்தில் லோக்சபா செயலர் பதில் அளித்துள்ளார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அங்குள்ள அரசு பங்களாவில் வசித்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, வீட்டில் உள்ள ஓர் அறையில், எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டன.
மனு தாக்கல்
இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.
கடந்தாண்டு நடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பி.,க்கள் 'நோட்டீஸ்' அளித்தனர். இதை ஏற்ற ஓம் பிர்லா, விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதை ரத்து செய்யக்கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க லோக்சபா, ராஜ்யசபா செயலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கு நீதிபதிகள் திபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக்சபா, ராஜ்யசபா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு, உண்மைக்கு புறம்பானது. அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, விசாரணைக் குழு அமைக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த விவகாரத்தில், யஷ்வந்த் வர்மா மீது எந்த பாரபட்ச நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகம்
யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டதாவது:
ஒரு நீதிபதி மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு இரு சபைகளும் ஒன்றாக சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். தனித்தனியாக எடுக்க முடியாது.
ஆக., 11ல் ராஜ்யசபா தலைவராக செயல்பட்ட துணை ஜனாதிபதி, இந்த பதவி நீக்க தீர்மானத்தை நிராகரித்தார். ஆனால், மறுநாள் லோக்சபாவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வாதிட்டார்.
அப்போது பேசிய நீதிபதி திபங்கர் தத்தா, 'ஒரு குறிப்பிட்ட சபையில் ஒரு தீர்மானம் நிராகரிக்கப்பட்டால், மற்றொரு சபையில் அது ஏற்கப்படலாமா? இந்த தீர்மானத்தை ராஜ்யசபா செயலகம் கையாண்ட விதத்தில் சந்தேகம் எழுகிறது' என, தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மானத்தை ராஜ்யசபா தலைவர் ஏற்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. லோக்சபாவில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து சரிபார்க்கவே விரும்பினார்' என, பதிலளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை இன்று ஒத்திவைத்தனர்
- டில்லி சிறப்பு நிருபர் - .

