ம.ஜ.த.,வில் குழப்பம், பூசல் இல்லை: மத்திய அமைச்சர் குமாரசாமி மறுப்பு
ம.ஜ.த.,வில் குழப்பம், பூசல் இல்லை: மத்திய அமைச்சர் குமாரசாமி மறுப்பு
ADDED : பிப் 03, 2025 05:00 AM

ஹாசன்; ''ம.ஜ.த., வில் எந்த குழப்பமோ, கோஷ்டி பூசலோ இல்லை,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
ஹாசன், சென்னராயபட்டணாவில், அவர் நேற்று அளித்த பேட்டி:
ம.ஜ.த., ஒருங்கிணைப்பு தலைவரான ஜி.டி., தேவகவுடா, என்னை புகழ்வதும், இகழ்வதும் சகஜம். அவர் 15 ஆண்டுகளாக இதைத்தான் செய்கிறார். இதை பொருட்படுத்த தேவையில்லை. ம.ஜ.த., வில் எந்த குழப்பமோ, கோஷ்டி பூசலோ இல்லை; வேறு கட்சியின் உட்பூசல் குறித்து, நான் பதிலளிக்க முடியாது.
ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, கட்சியை பலப்படுத்த, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் எங்கள் முன் இருக்க வேண்டும். அவர் கனவை நனவாக்க வேண்டும் என்பது, எங்களின் நோக்கமாகும்.
விமான நிலையம்
ஹாசனில் விமான நிலையம் அமைக்கப்பட்டு, விவசாய உற்பத்தி பொருட்கள் கார்கோ மூலம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்பது, தேவகவுடாவின் விருப்பம்.
ஹாசனில் விமான நிலையம் அமைப்பது குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருடன், ஆலோசனை நடத்தினேன். மாநில அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
குதிரே முக் இரும்பு தாது உற்பத்தி தொழிற்சாலையை புதுப்பிக்க, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காமல் இடையூறு செய்கிறது. எனவே அந்த தொழிற்சாலையை என்.எம்.டி.சி., எனும் தேசிய கனிம வளம் மேம்பாட்டு கார்ப்பரேஷனில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
தேவதாரா சுரங்கம் துவங்கப்பட்டிருந்தால், 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். எச்.எம்.டி.,யை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கிறேன். பத்ராவதியின் விஸ்வேஸ்வரய்யா இரும்பு தொழிற்சாலைக்கும் புத்துயிர் அளிக்கப்படும்.
அருகதை இல்லை
நான் மத்திய அமைச்சராகி, ஏழு மாதங்கள் கடந்துள்ளன. வளர்ச்சி திட்டங்கள் குறித்து, கர்நாடக அரசிடம் இருந்து எனக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. மத்திய பட்ஜெட்டில் மாநிலத்துக்கு அநியாயம் நடந்துள்ளதாக விமர்சிக்க, காங்கிரசுக்கு அருகதை இல்லை.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின், 1983 வரை காங்கிரஸ் அரசு இருந்தது. ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, வாடெஹொளே அணைகளின் பணிக்கு, மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டதா. தேவகவுடா பிரதமராக இருந்த போது, நீர்ப்பாசன திட்டங்களை கொண்டு வந்தார்.
இதனால் மாநிலத்துக்கு 15,000 கோடி ரூபாய் முதல் 20,000 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்தது.
கர்நாடகாவுக்கு மத்திய பட்ஜெட்டில், தனியாக திட்டங்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மூலம், மாநிலத்துக்கு பல உதவிகள் கிடைக்கும். ஆந்திரா, விசாகபட்டினத்தின், ஆர்.ஐ.எல்., தொழிற்சாலை மூடும் நிலையில் இருந்தது. இதை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

