சுவர்ண பாரதி மஹோத்ஸவம்; பக்தர்கள் ஒன்றரை லட்சம் பேர் 'நமசிவாய' பாராயணம்
சுவர்ண பாரதி மஹோத்ஸவம்; பக்தர்கள் ஒன்றரை லட்சம் பேர் 'நமசிவாய' பாராயணம்
UPDATED : அக் 27, 2024 12:08 PM
ADDED : அக் 27, 2024 02:43 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த சுவர்ண பாரதி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக 'நம சிவாய' பாராயண சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
மனித குலத்தின் மிகப் பழமையான மற்றும் தொடர்ச்சியான வாய்மொழி மரபுகளில் ஒன்றான வேத நாம ஜபம், நமது மூதாதையரின் ஆழ்ந்த ஆன்மிக ஞானத்துடன் வாழும் இணைப்பாக செயல்படுகிறது.
இந்த புனித மந்திரங்களின் துல்லியமான தாளங்கள், உச்சரிப்புகள் மற்றும் அதிர்வுகள் மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் சக்திவாய்ந்த அதிர்வுகளை உருவாக்குகின்றன.
வேதங்களின் முறையான கட்டமைப்பு மற்றும் சிக்கலான பாராயண விதிகள், பண்டைய அறிஞர்களின் அறிவியல் நுட்பத்தை பிரதிபலிக்கின்றன. எழுதப்பட்ட பதிவுகள் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம், ஒவ்வொரு அசைவையும் கணித ஒத்திசைவில் உன்னிப்பாக உச்சரிப்பதன் வாயிலாக, தலைமுறை தலைமுறையாக அறிவை வாய்வழியாக கடத்துவதற்கான இந்திய கலாசாரத்தின் குறிப்பிடத்தக்க திறனை நிரூபிக்கிறது.
இந்திய கலாசாரத்தின் தெய்வீக சாரம் அதன் உலகளாவிய கருணையில் உள்ளது. ஹிந்து மதம், சீக்கியம், சமணம் மற்றும் பவுத்தம் போன்ற முக்கிய மதங்களின் பிறப்பிடமாக நம் நாடு உள்ளது.
கடந்த காலங்களில் நமது கலாசாரத்தைச் சீரழிக்கவும், கறைபடுத்தவும், களங்கப்படுத்தவும், அழிக்கவும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால், நம் கலாசாரத்தை அழிக்க முடியாததால் நாடு பிழைத்துள்ளது. தர்மம் என்பது நம் கலாசாரத்தின் மிக அடிப் படையான கருத்தாகும். தர்மத்தால் ஆளப்படும் சமுதாயத்தில், ஏற்றத்தாழ்வு களுக்கு இடமில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, நமசிவாய என முழங்கி, சுவாமி அருள் பெற்றனர்.