சித்தராமையா - சிவகுமார் இடையே பிரச்னையே... இல்லையாம்! பூசி மெழுகும் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங்
சித்தராமையா - சிவகுமார் இடையே பிரச்னையே... இல்லையாம்! பூசி மெழுகும் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங்
ADDED : ஜன 14, 2025 06:43 AM

கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவிக்கான பிரச்னை மீண்டும் தலைதுாக்கி உள்ளது. சித்தராமையா ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள் கூறிவரும் நிலையில், துணை முதல்வர் சிவகுமார் முதல்வராகும் நேரம் நெருங்கி வந்துவிட்டதாக அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூறி வருகின்றனர்.
இதனால் முதல்வர், துணை முதல்வர் ஆதரவாளர்கள் இடையில் நாளுக்கு நாள் கருத்து மோதல் அதிகரித்தது. கட்சிக்கும், ஆட்சிக்கும் பிரச்னை ஏற்படுத்தும் சூழல் உருவானது.
உத்தரவு
இதனால் முதல்வரை அழைத்துப் பேசிய கட்சி மேலிடம் கட்சிக்கும், ஆட்சிக்கும் பிரச்னை ஏற்படாத வகையில் செயல்படும்படி உத்தரவிட்டது. அத்துடன் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்தவும் மேலிடம் அறிவுறுத்தியது.
நேற்று காலை காங்கிரஸ் பவனில், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தலைமையில் கட்சியின் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசியது:
நம் கட்சியின் சில தலைவர்களுக்கு ஒழுக்கம் இல்லை. தலைவர்களிடமே ஒழுக்கம் இல்லை என்றால், தொண்டர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? கட்சி நமக்கு தாய் போன்றது. அரசு நமக்கு குழந்தை போன்றது.
கட்சியைவிட நாம் யாரும் பெரியவர்கள் இல்லை. கட்சியை சேதப்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை பார்த்துக் கொண்டு நாங்கள் பொறுமையாக இருக்க மாட்டோம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தை அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா உள்ளிட்டோர் புறக்கணித்தனர். இருவரும் துமகூருவில் இருந்ததாக தகவல் வெளியானது. மேலிடப் பொறுப்பாளர் வருகை பற்றித் தெரிந்தும் இருவரும் பெங்களூரு வராதது, கட்சிக்குள் இருந்த சலசலப்பை உறுதிப்படுத்தியது.
ஒற்றுமை
கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர், “முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுகின்றனர். இருவருக்கும் இடையில் பிரச்னை இருப்பது போன்று சில ஊடகங்கள், பா.ஜ., தலைவர்கள் மாயை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். முதல்வர் பதவி தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்படாது,” என்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பட்ஜெட், தொகுதிக்கு நிதி உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐந்து கேள்வி
அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக சில கேள்விகளை கட்சி மேலிடம் கேட்டிருந்தது.
அவை:
தங்கள் துறையில் செய்த சாதனைகள் என்ன?
உங்கள் துறையில் கொண்டு வந்த மாற்றங்கள் என்ன?
கட்சியை கட்டமைக்க உங்களின் பங்களிப்பு என்ன?
அரசின் புகழை பரப்ப நீங்கள் செய்த பணிகள் என்ன?
கட்சிக்கு உங்களின் பங்களிப்பு என்ன?
இந்த கேள்விகளுக்கு பதில் தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.
அறிக்கை
அமைச்சர்கள் அளித்த பதில்கள் அறிக்கை வடிவில் தயாரிக்கப்பட்டு, முதல்வரிடம் இருந்தது. அந்த அறிக்கையை ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம் முதல்வர் நேற்று சமர்ப்பித்தார்.
இது தொடர்பாக அமைச்சர்களின் நடவடிக்கைகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கண்காணிக்கப்படும். இரண்டு மாதங்கள் கழித்து கட்சி மேலிடத் தலைவர்கள், அமைச்சர்களுடன் நேருக்கு நேர் அமர்ந்து கலந்துரையாடுவர் என, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.