ஆர்.எஸ்.எஸ்., பற்றி சரியான புரிதல் இல்லை: தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஆர்.எஸ்.எஸ்., பற்றி சரியான புரிதல் இல்லை: தலைவர் மோகன் பாகவத் பேச்சு
UPDATED : ஜூன் 14, 2026 09:18 PM
ADDED : ஜூன் 14, 2026 09:13 PM
திருவனந்தபுரம்: ''உலகிலேயே மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்., திகழ்கிறது. அதே சமயம், அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்பாகவும் இருக்கிறது,'' என, அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., உலகிலேயே மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக திகழ்ந்தாலும், அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்பாகவும் இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்கள், ஆர்.எஸ்.எஸ்.,சை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். நுாற்றாண்டை கொண்டாடும் இந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ்., பற்றி மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.,சை முழுதாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், அதற்குள் வந்து, அதன் உள் விவகாரங்களை உற்று நோக்க வேண்டும்.
நவீன வளர்ச்சி, உலகெங்கும் முன்னேற்றத்தை கொண்டு வந்திருப்பது உண்மை தான். ஆனால், அது மாசடைதலையும், சுற்றுச்சூழல் சவால்களையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது. மாசடைவதை தவிர்க்க வேண்டுமெனில், வளர்ச்சியை நிறுத்த சொல்கின்றனர். வளர்ச்சி வேண்டுமெனில், இயற்கையை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்தி ஒரு வழியை கண்டறிவது தான், தற்போது மனிதகுலத்திற்கு முன் இருக்கும் சவால்.
இவ்வாறு அவர் பேசினார்.
'பாகிஸ்தானுடன், இந்தியா பேச்சு நடத்த வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் தத்தாத்ரேய ஹொசபலே கருத்து தெரிவித்தது சர்ச்சையான நிலையில், அது குறித்து, மோகன் பாகவத் கூறுகையில், ''பாக்., மக்கள் மீதான அக்கறையிலேயே, ஹொசபலே அப்படி பேசினார். ஏனெனில், நாம் ஹிட்லர் அல்ல. அது, நம் இயல்பும் அல்ல. எனவே, அவர்களுக்கும் வாய்ப்புக்கான கதவை நாம் திறக்க வேண்டும்,'' என்றார்.
