பா.ஜ., மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டில் உண்மை இல்லை; லோக் ஆயுக்தா அதிரடி அறிக்கை
பா.ஜ., மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டில் உண்மை இல்லை; லோக் ஆயுக்தா அதிரடி அறிக்கை
ADDED : நவ 17, 2024 06:42 AM
பெங்களூரு: 'முந்தைய பா.ஜ., அரசின் மீதான, 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு பொய்யானது' என, லோக் ஆயுக்தா அறிக்கை அளித்துள்ளது.
'முடா', வால்மீகி மேம்பாட்டு ஆணையம் உட்பட, பல்வேறு ஊழல்களை முன்வைத்து, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, எதிர்க்கட்சி பா.ஜ., குடைச்சல் கொடுக்கிறது. இதற்கு பழி வாங்கும் நோக்கில், முந்தைய பா.ஜ., அரசு காலத்திட்டங்களை காங்கிரஸ் கிளறுகிறது.
கொரோனா கொள்முதல் குறித்து விசாரணை நடத்த, அமைச்சரவை கமிட்டி அமைக்க, இம்மாதம் 14ம் தேதி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் பா.ஜ., அரசு மீது அளிக்கப்பட்ட புகாரில் உண்மை இல்லை என, லோக் ஆயுக்தா அறிக்கை அளித்துள்ளது.
பா.ஜ., அரசு இருந்தபோது, பெங்களூரு மாநகராட்சியில் 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக, அன்றைய ஒப்பந்ததாரர் சங்கத்தின் துணைத்தலைவர் அம்பிகாபதி குற்றஞ்சாட்டினார். 'மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில், விளையாட்டு மைதானம் தொடர்பான பணிகளுக்கு பில் தொகை வழங்க, கமிஷன் கேட்கின்றனர்' என, லோக் ஆயுக்தாவில் புகார் அளித்திருந்தார்.
இதையே அஸ்திரமாக பயன்படுத்திய காங்கிரசார், அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை படத்தை போட்டு, போஸ்டர் வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுத்தனர். இது மக்களின் பார்வையை காங்கிரஸ் பக்கம் திருப்பியது. பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவும் காரணமாக இருந்தது.
இந்த கமிஷன் குற்றச்சாட்டு குறித்து விசாரணையை முடித்த லோக் ஆயுக்தா, அறிக்கை அளித்துள்ளது. இதில், 'ஒப்பந்ததாரர் அம்பிகாபதி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இவர் மாநகராட்சி கிழக்கு மண்டத்திலோ அல்லது மற்ற மண்டலத்திலோ கடந்த ஆறு ஆண்டுகளில் விளையாட்டு மைதானம் தொடர்பாக, எந்த பணிகளையும் ஒப்பந்தம் பெறவில்லை.
'ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.மைதான பணிகளை ஒப்பந்ததாரர் கிருஷ்ண மூர்த்தி என்பவர் முடித்துள்ளார்' என விவரிக்கப்பட்டுள்ளது.

