ADDED : டிச 17, 2024 04:40 AM
'ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுவது ஒன்றும் தவறில்லையே' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தட்சிண கன்னடாவில் உள்ள மசூதியில், 2023, செப்டம்பரில் இரவு நேரத்தில், இரண்டு இளைஞர்கள் புகுந்தனர். அவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்பிவிட்டு, பைக்கில் தப்பி சென்றனர்.
இது தொடர்பாக கடபா போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், கடபா தாலுகாவை சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சின் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில், செப்டம்பர் 13ம் தேதி, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. 'அவர்கள் எழுப்பிய கோஷத்தால், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் ஹிந்து - முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இப்படி இருக்கும் போது, எப்படி மோதல் உண்டாகும்' என கேள்வி எழுப்பிய நீதிபதி, இவ்வழக்கை ரத்து செய்தார்.
இதை எதிர்த்து மசூதி நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு நேற்று, நீதிபதிகள் பங்கஜ் மித்தல், சந்தீப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுவது தவறில்லையே. அப்படியே கோஷமிட்டால் எப்படி மற்றொரு மதத்தின் உணர்வுகளை பாதிக்கும். இவ்விவகாரத்தில், கர்நாடக போலீசார், தங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்' என்றனர்.
பின், தேதி குறிப்பிடாமல் ஜனவரி மாதம் வழக்கை ஒத்தி வைத்தனர். - -நமது நிருபர் -

