அரசின் மீது கோபம் இருக்கலாம்; விண்வெளி வீரர் மீது இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது; எதிர்க்கட்சிகளை சாடிய ஜிதேந்திர சிங்
அரசின் மீது கோபம் இருக்கலாம்; விண்வெளி வீரர் மீது இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது; எதிர்க்கட்சிகளை சாடிய ஜிதேந்திர சிங்
ADDED : ஆக 18, 2025 04:58 PM

புதுடில்லி: “உங்களுக்கு அரசின் மீது கோபம் இருக்கலாம் ஆனால் விண்வெளி வீரர் மீது கோபம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என எதிர்கட்சிகளை மத்திய விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடுமையாக சாடியுள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல் இந்தியர் சென்றது தொடர்பாக லோக்சபாவில் சிறப்பு விவாதம் நடந்தது. மத்திய விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
எதிர்க்கட்சியினர், நமது விண்வெளி சாதனைகளுக்காக விண்வெளி நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளை பாராட்டத் தவறிவிட்டீர்கள். உங்கள் கோபம் அரசாங்கத்தின் மீது இருக்கலாம். உங்கள் கோபம் பாஜ மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதும் இருக்கலாம்.
ஆச்சரியம்
ஆனால் நீங்கள் ஒரு விண்வெளி வீரர் மீது கோபப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் அந்த விண்வெளி வீரர், ஒரு விண்வெளி வீரராக இருப்பதைத் தவிர, இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் ஆகவாகவும் இருக்கிறார்.
அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. நீங்கள் பூமியின் மீது கோபமாக இருக்கிறீர்கள், நீங்கள் வானத்தின் மீது கோபமாக இருக்கிறீர்கள், இன்று நீங்கள் விண்வெளியின் மீதும் கோபமாக இருப்பது போல் தெரிகிறது.
முக்கிய பங்கு
சிறிது காலத்திற்கு முன்பு, சிந்தூர் நடவடிக்கை மூலம், பூமியிலிருந்து வானம் வரை இந்தியாவின் திறன் வெளிப்பட்டது. உலகம் முழுவதும் இந்தியாவை அங்கீகரித்தது. சிந்தூர் நடவடிக்கையின் போது, விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கும் முக்கியத்துவமாக இருந்தது.நமது விண்வெளித் துறை 60-70 ஆண்டுகளாக ஏன் தனிமைப்படுத்தப்பட்டது, அது ஏன் மெதுவாகச் செயல்பட்டது?
அந்தக் கேள்விக்கு பதிலளிக்கப்படும்போது, மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற 2014ம் ஆண்டு மே 26ம் தேதி அன்று, ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. இந்த விண்வெளிப் பயணம் வேகத்தையும் வலிமையையும் பெற்றது என்பதை நாம் புரிந்துகொள்வோம். இவ்வாறு ஜிதேந்திர சிங் பேசினார்.